வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (05/03/2018)

கடைசி தொடர்பு:10:30 (05/03/2018)

கல்லூரிப் பேராசிரியர் கொலையில் ராக்கெட்ராஜா கூட்டாளிகள் கைது!

நெல்லையில் கல்லூரிப் பேராசிரியர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய 4 குற்றவாளிகள் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ராக்கெட்ராஜா கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

ராக்கெட்ராஜா கூட்டாளிகளால் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த குமார் பாளையங்கோட்டையில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடன் அவரின் மகள் அனுசுயா, மருமகன் செந்தில்குமார் பேத்தி அஸ்மிதா ஆகியோரும் வசித்து வருகிறார்கள். செந்தில்குமார் எம்.இ சிவில் படித்துவிட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். குமாரும் அவரின் மருமகன் செந்தில்குமாரும் கடந்த 26-ம் தேதி காலையில் வீட்டின் முன்பாக பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்கியது. 

அதனால் அச்சம் அடைந்த இருவரும் வீட்டினுள் சென்று கதவை அடைத்துக்கொண்டனர். ஆனால், அந்தக் கும்பல் கதவின் மீது வெடிகுண்டு வீசி உடைத்துவிட்டு உள்ளே நுழைந்து செந்தில்குமாரைக் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. குமாருக்கும் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர். பாலமுருகன் என்பவருக்கும் இடையே 1.75 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறு இருந்துள்ளது. இதன் காரணமாகக் குமாரைக் கொல்லவந்த கூலிப்படையினர் அவருக்குப் பதிலாக அவருடைய மருமகன் செந்திகுமாரை அந்தக் கும்பல் கொலை செய்துவிட்டுச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக ராக்கெட் ராஜா., அவரது அண்ணனும் வழக்கறிஞருமான பாலகணேசன், டாக்டர். பாலமுருகன் ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் மீது 10 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர், வடக்கன்குளத்தைச் சேர்ந்த அஸ்வின் வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ், பழைய பேட்டையைச் சேர்ந்த மொட்டைச்சாமி ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், ராக்கெட்ராஜாவின் கூட்டாளிகள் சிலருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில், ராஜபாளையத்தைச் சேர்ந்த நட்டு என்ற நடராஜன், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அருண்பாபு, புரோட்டா ராஜா ஆகிய மூவரைக் கைது செய்தனர். அவர்களிடம் இந்தக் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு பின்னர் மூவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இதனிடையே, ராக்கெட்ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான கோழி அருள் திடீரென கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கோழி அருள் அவரது நண்பரான சகாயராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களுக்குப் பேராசிரியர் செந்தில்குமார் கொலையில் தொடர்பு உள்ளதா என விசாரித்த போலீஸார், பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.