வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (05/03/2018)

கடைசி தொடர்பு:10:45 (05/03/2018)

`மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறது` - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

மானிய விலையில் ஸ்கூட்டர் முறையாகத்தான் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். 

அம்மா ஸ்கூட்டர்

திருச்சி, மரக்கடை, கூட்டுறவு சிந்தாமணிக் கிடங்கு வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 3,922 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் நேற்று (4.3.2018) வழங்கினர்.

தமிழகத்தில் பணிக்குச் செல்லும் மகளிர் பயனடையும் வகையில் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் திருச்சியில் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 10-ம் தேதி வரை  இந்தத் திட்டத்தில் பயனடையும் பெண்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.  14 ஆயிரத்து 286 பெண்களிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், ஆய்வுகளின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் 3,922 இருசக்கர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 149 பேருக்கு மான்ய விலையுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எம்.பி--க்கள் ரத்தினவேல், ப.குமார், மணப்பாறை எம்.எல்.ஏ சந்திரசேகர், மாவட்ட ஊகர வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் பாபு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,“ஜெயலலிதா கொண்டுவந்த இத்திட்டம் தமிழக வரலாற்றில் மாபெரும் திட்டமாகும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது. முதற்கட்டமாகப் பணிக்குச் செல்லும் மகளிருக்கு 2017-18-ம் ஆண்டில், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதியில் 1,992, நகர்ப்புற பகுதியில் 1,930 என 3,922 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில்; ஆதி திராவிடருக்கு 21 விழுக்காடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 144 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது”  என்றார்.

அமைச்சர் வளர்மதி பேசுகையில், “பெண்களின் முன்னேற்றத்திற்காக ஜெயலலிதா, பல்வேறு திட்டங்களை அறிவித்து மிகச்சிறப்பாக செயல்படுத்தினார். என்னென்ன திட்டங்கள் பெண்களுக்காகக் கொண்டு வந்தார்களோ அத்திட்டங்கள் அனைத்தையும்  தமிழ்நாடு முதல்வர் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். பெண் கல்வி ஊக்குவிக்க, பெண்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தொட்டில் குழந்தை திட்டம், பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் என்று பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். மக்களின் பசியைப் போக்குவதற்காக 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கச் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து பெண்களுக்காக தற்போது இரு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது” என்றார். இறுதியாகப் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,“தமிழக அரசு வழங்கியுள்ள மானிய விலையிலான ஸ்கூட்டர் திட்டம் முறையாகப் பதிவு செய்தவர்களுக்குதான் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை” என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க