மலேசியாவிலிருந்து வந்த கணவன் தன்னைப் பார்க்க வரலியே!' - வேதனையில் தூக்கில் தொங்கிய மனைவி

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய கணவர் தன்னையும் பிள்ளைகளையும் பார்க்க வராமல் அவருடைய அம்மா வீட்டுக்குச் சென்றதால் மனமுடைந்த பெண் ஒருவர், கடந்த 3.3.2018 அன்று, தன் வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மாம்பழத்தான் ஊரணி பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவருடைய மனைவி  அழகுமீனாள் (23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அழகுமீனாளின் கணவர் செந்தில்குமார் கடந்த இரண்டு வருடங்களாக மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2.3.2018 அன்று, பொன்னமராவதிக்குத் திரும்பியிருக்கிறார். தனது வீட்டுக்குப் போகிற வழியில் இருந்த தன் அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறார். அன்று முழுவதும் அங்கு இருந்துவிட்டு மறுநாள்... அதாவது, 3-ம் தேதி மாம்பழத்தான் ஊரணி பகுதியில்  உள்ள தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.  

செந்தில்குமார் வந்ததிலிருந்தே அவரிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார் அழகுமீனாள். கணவரும் தன் பிள்ளைகளுடன் பேசிவிட்டு, மனைவியுடன் பேசாமலேயே இருந்துள்ளார். மதிய நேரத்துக்கு முன்பாக, பொன்னமராவதியில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலைபார்க்கும் தன் மனைவியின் தங்கையைச் சென்று சந்தித்த செந்தில்குமார், "உன்னோட அக்கா எங்கிட்ட பேசாமல் அமைதியா இருக்கா, என்ன காரணம்னு கேட்டு அவளைச் சமாதானம் பண்ணிட்டு வா" என்றுக் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். வீட்டுக்கு வந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சிக் காத்திருந்தது. அங்கு மின் விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் அழகுமீனாள் இருந்தார். தகவலறிந்து வீட்டிற்கு ஓடிவந்த செந்தில்குமார், மனைவியின் சடலத்தைப் பார்த்துக் கதறி அழுதிருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொன்னமராவதி போலீஸார், அழகுமீனாள் சடலத்தை உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, செந்தில்குமாரிடமும் அவர் மனைவியின் தங்கையிடமும் விசாரணை நடத்தினர். நடந்த சம்பவங்களைப் போலீஸாரிடம் செந்தில்குமார் விவரித்திருக்கிறார். 

"அந்தப் புள்ள ரொம்ப அமைதியான சுபாவம் கொண்ட பொண்ணுங்க. செந்தில்குமார் வெளிநாட்டிலிருந்து வந்ததும் தன்னையும் பிள்ளைகளையும் பார்க்க வராமல், அம்மா வீட்டுக்குப் போயிட்டாரேனு அந்தப் புள்ளைக்கு மனவேதனைங்க. ரெண்டு வருசம் கழிச்சு வர்ற புருஷன்காரன் தன்னைப் பார்க்க வராமல், அம்மா வீட்டுக்குப் போனா, எந்த மனைவிக்குதான் கோபம் வராது. என்ன ஒண்ணு. 'ஏன் இப்படி பண்ணிணே?'னு கணவனிடம் கேள்வி கேட்டிருக்கலாம். அதைப் பண்ணாம தூக்குல தொங்கிடுச்சே. இப்போ, அந்த ரெண்டு புள்ளைங்களும் தாயில்லாத புள்ளைங்களாயிடுச்சே" என்று அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள். இந்த நிலையில் அழகு மீனாளின் தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்ற கோணத்திலும் பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!