வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (05/03/2018)

கடைசி தொடர்பு:11:38 (05/03/2018)

`மனித ரத்தத்தில் சோறு பிசைந்து வானில் வீசினால் என்னவாகும்?’ - கிராம மக்களின் விநோத வழிபாடு  

சமைத்த சோற்றை மனித ரத்தத்தில் பிசைந்து வானத்தில் அங்குமிங்கும் அலைந்து திரியும் தங்கள் தெய்வங்களுக்கு கிராம மக்கள் தூக்கி எறியும் விழா ஒன்று மிகக் கட்டுப்பாட்டுடன்  நடந்து முடிந்தது. சுவாரஸ்யம் நிறைந்த அந்தக் கிராமத்துத் திருவிழா பற்றி பார்ப்போமா?


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள  வாராப்பூர் என்ற கிராமத்தில் பெரிய அய்யனார், பாலையடி கருப்பண்ணசாமிகளுக்கு மாசி மகத் திருவிழா சில நாள்களுக்கு முன்பு நடந்தது. வாராப்பூர் அதனைச் சுற்றியுள்ள  பதினெட்டுப் பட்டி மக்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த விழாவில் அன்னியர்களுக்கு அனுமதி இல்லை. காரணம் ’பில்லி சோறு’. அதென்ன பில்லி சோறு... கடையில் வாங்கப்படாத அரிசியில், அதாவது, விதைநெல்லிலிருந்து பிரிக்கப்பட்ட அரிசியால் சமைக்கப்பட்ட சோற்றைக்  குழம்பு ஊற்றுவதற்குப் பதிலாக மனித ரத்தத்தில் பிசைந்து படைப்பதே ' பில்லி சோறு'.  இதனைப் பழைய திருப்பதி லட்டுபோல பெரிது பெரிதாக உருட்டி, பதினெட்டுப்பட்டி கோயில் பூசாரிகளும் ஒன்று  சேர்ந்து வனத்துக்குள்  சென்று   வானத்தில் எறிவார்கள். அதில் ஒரு பருக்கைக்கூட புவி ஈர்ப்பு சக்தியால் பூமிக்குத் திரும்பி வருவதில்லை. காரணம், பெரிய அய்யனாரும் கருப்பண்ண சாமியும் அந்த 'பில்லி சோற்றை' ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டுவிடுவதால்தான் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள். 

மூன்று நாள்களுக்கு நடத்தப்படும் இந்தத் திருவிழா, கடந்த 2-ம் தேதி தொடங்கி, 4-ம் தேதி (நேற்று) முடிந்தது. முதல் நாள் ஐதீகத்தின்படி, கோயிலுக்கு  வந்த மூன்று சிறுவர்களுக்கு அவர்கள் இடுப்பில் கட்டியிருக்கும்  அரைஞாண்கயிற்றைப் பூசாரிகள் அறுத்தனர். இதனையடுத்து, பரம்பரையாக  உள்ள வழக்கப்படி ஒருவர் தொடையைக் கீறி, அதிலிருந்து வந்த ரத்தத்தை அங்கு தயாராக இருந்த சோற்றில் ஊற்றிப் பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்தனர். அன்று மதியம்  இந்த பில்லி  சோற்று உருண்டைகளை எடுத்துக்கொண்டு, காட்டுப் பகுதியில் வீசுவதற்காகப்  பூசாரிகள் மட்டும்  ஓடினார்கள். பில்லி  சோற்றைக் காட்டுப் பகுதியில் வானத்தில்  மேல் நோக்கி வீசினார்கள். அப்படி வீசப்படும் அந்த பில்லி  சோற்றில் ஒரு பருக்கையும்  தரையில் விழாது என்பது ஐதீகம். விழுந்ததா? இல்லையா? என்பதெல்லாம் பார்ப்பதற்கோ, அதனை புகைப்படம் எடுப்பதற்கோ அனுமதி கிடையாது. இன்னும் சொல்லப் போனால், இந்தப் படையலின் போது ஊர்மக்களே கலந்துகொள்ள முடியாது. பூசாரிகள் மட்டும்தான் செல்வார்கள். அந்தப் பூசாரிகள் திரும்பி  ஊர்மக்களுக்கு முன்பாக நிற்கும்போது, அவர்களில் ஒருவருக்கு  சாமி  வந்து, பில்லி சோற்றைத் திருப்தியாகச் சாப்பிட்டதைக் கூறுவார். அத்துடன் அந்த வருடத்துக்கான அருள்வாக்கையும் கூறிவிட்டு மலையேறிவிடுவார்.இந்த வினோத வழிபாடு மற்றும் திருவிழா பற்றி அந்த ஊர்மக்கள் சிலாகித்து விவரிக்கின்றனர்.

" 200 ஆண்டுகளாக நடந்துவரும் திருவிழா இது. ஆரம்பத்தில் பழுதில்லாத குழந்தையைப் பலி கொடுத்து, அந்த ரத்தத்தில்  'பில்லி சோறு ' படைப்பது  வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் மூன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பலி கொடுக்கப்படுவார்கள். அப்படி ஒருமுறை ஒரே ஒரு ஆண் பிள்ளையைப் பெற்ற தம்பதிக்குத் தங்களோட பிள்ளையை பலி கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ’ஒரே புள்ளையை பலி கொடுத்துட்டு நாங்க என்ன பண்ணுவோம்’ என்று ஊர்க்காரங்ககிட்டே கதறி கேட்டிருக்காங்க. ஊர்ப் பெரியவங்க ஊர்முறை அதுதான். கட்டாயம் பலி கொடுத்தே ஆகணும்னு  சொல்லிட்டாங்க. இவங்க, பலி கேட்கும் அய்யனார், கருப்பண்ணசாமிகிட்டேயே கண்ணீர் விட்டுக் கதறி இருக்காங்க. அன்னிக்கு ராப்பொழுதில் ஊர்ப் பெரியவர்கள் கனவுல வந்த அய்யனாரும் கருப்பரும் 'இனிமே குழந்தையைப் பலி கொடுக்க வேண்டாம். அதுக்கு பதிலா, ஊரில் உள்ள ஒருத்தருடைய தொடையைக் கீறி, அந்த ரத்தத்தில் 'பில்லி சோறு'படைக்கும்படி சொல்லிட்டுப் போயிட்டாங்க. அன்னியிலிருந்து இதுதான் வழக்கம்" என்கிறார்கள் ஊர் மக்கள்.

 இந்தத் திருவிழாவுக்கு வாராப்பூர், சம்பட்டிவிடுதி, அரியாண்டி, மஞ்சகரை, தெற்கு தெரு,உள்ளிட்ட பதினெட்டுப் பட்டி கிராம மக்கள் வண்டி கட்டிக்கொண்டு  குடும்பத்தோடு வந்து  செல்கின்றனர்.