வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (05/03/2018)

கடைசி தொடர்பு:14:58 (09/07/2018)

`பதவி வெறி பிடித்தவர்கள் இந்த ஆட்சியைக் கலைக்கத் துடிக்கிறார்கள்!’ - அமைச்சர் மணிகண்டன் காட்டம்

பதவி வெறி பிடித்தவர்கள் இந்த அரசை எப்படியும் கலைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக அமைச்சர் மணிகண்டன் பேச்சு.

ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் அமைச்சர் மணிகண்டன்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் கலந்துகொண்ட தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மு.மணிகண்டன் 100 பெண்களுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் மணிகண்டன், ''அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. ரூ.20,000 மானியமாக வழங்கப்படும் என்பதையும் உயர்த்தி ரூ.25,000 மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 1,920 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கிராமப்புறப் பெண்களுக்கு 1,340 பேரும் நகர்ப்புறப் பெண்களுக்கு 580 பேரும் உட்பட 1,920 பேருக்கு வழங்கப்படும். முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்கப்பட்டு, இத்திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. பெண்கள் பணிக்கு விரைந்து செல்லவும் பாதுகாப்புடன் இருக்கவும் தலைக்கவசத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு இருசக்கர வாகனம் வழங்க முடிவு செய்துள்ளோம். திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு, தாலிக்குத் தங்கம் 8 கிராமும் திருமண நிதியுதவியாக ரூ.50,000-மும் பெண்களுக்கு வழங்கும் ஒரே அரசு இந்தியாவில் தமிழகத்தில் உள்ள அரசாகத்தான் இருக்கும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் பெண்களுக்கு என இது போன்ற நலத்திட்டங்கள் எங்கும் செயல்படுத்தப்படவில்லை.

தகவல் தொழில்நுட்பவியல்துறையின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, மண்டபம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள 39 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் பைலட் ஸ்கீமாகத் தொடங்கப்படவுள்ளது. இதுபோன்ற சிறப்பான திட்டங்களுடன் தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி சிறப்பாக இருப்பதால் பதவி வெறி பிடித்தவர்கள் இந்த அரசை எப்படியும் கலைத்து விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் ஒருநாளும் நிறைவேறாது'' என்றார்.