வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (05/03/2018)

கடைசி தொடர்பு:12:33 (05/03/2018)

"திரிபுராவில் தோல்வி ஏன்... பி.ஜே.பி. வெற்றிக்கணக்கு தொடருமா?" - மார்க்சிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது?

மோடி - திரிபுரா வெற்றி

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை மெய்ப்பிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இந்த முடிவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரஸையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 

திரிபுராவில் 25 ஆண்டுகால இடதுசாரி முன்னணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. திரிபுராவில் 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், பி.ஜே.பி. 35 இடங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அதன் கூட்டணியான ஐ.பி.எஃப்.டி 8 இடங்களில் வென்று, மொத்தம் 43 தொகுதிகளை தங்கள் வசப்படுத்தியுள்ளன. முந்தைய சட்டப்பேரவையில் பி.ஜே.பி-க்கு ஒரு இடம்கூட இல்லை. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. இதுவரை ஆட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

அமித் ஷாஇந்த வெற்றிக்காக திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா, கர்நாடகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் பி.ஜே.பி. எதிர்காலத்தில் வெற்றிபெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் காவி வண்ணம் உருவாகி வருவதாகத் தெரிவித்த அவர், தங்களின் வெற்றியை ஏற்கமுடியாமல், சிலர் பிதற்றுகிறார்கள் என்றும் மத்திய அரசின் கிழக்கத்திய கொள்கைகளுக்கு வடகிழக்கு மாநில மக்கள் அளித்துள்ள வெற்றி என்றும் கூறினார். பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, "கர்நாடக மாநிலமே பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு" என்று குறிப்பிட்டுள்ளார். திரிபுராவில் வரும் 10-ம் தேதி புதிய அரசு அமையும் என்று பி.ஜே.பி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாகாலாந்தில் கூட்டணி ஆட்சி!

நாகாலாந்து மாநிலத்தில் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. பி.ஜே.பி மற்றும் கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி (என்.டி.பி.பி) இணைந்து 28 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. நாகா மக்கள் முன்னணி கட்சி 27 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி இரண்டு இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனர். 

மேகாலயாவில் தொங்கு சட்டசபை!

மேகாலயா மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 21 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தேசிய மக்கள் கட்சி 19 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. மக்கள் ஜனநாயக முன்னணி 4, சுயேச்சைகள் 3, பி.ஜே.பி, மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி தலா 2, என்.சி.பி மற்றும் கே.ஹெச்.என்.ஏ.எம் தலா ஒன்று என முடிவுகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. 

"உழைக்கும் மக்களுக்காகச் செயல்படுவோம்!" 

இந்த வெற்றி குறித்து பி.ஜே.பி. மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், திரிபுராவில் ஆட்சியை இழந்துள்ள இடதுசாரிக் கட்சிகள், தோல்வி குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில், " திரிபுரா மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, அந்த மாநிலத்தில் பி.ஜே.பி.- ஐ.பி.எஃப்.டி கூட்டணி அரசு அமைவதற்கு இட்டுச்செல்கிறது. அரசுப் பொறுப்பில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இடது முன்னணி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.

தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்காக, பி.ஜே.பி., இதர காரணிகளுக்கு அப்பால்,  பெருமளவுக்குக் கொட்டப்பட்ட பணத்தையும் வேறு வழிகளையும் பயன்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடது முன்னணிக்கும் ஆதரவளித்த 45 விழுக்காடு வாக்காளர்களுக்கு அரசியல் தலைமைக்குழு நன்றி தெரிவிக்கிறது. இந்தத் தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களைக் கட்சி கவனமாக ஆய்வு செய்யும். இதைச் சரிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளது.

"வரலாற்றுச் சாதனை வெற்றி!"

தமிழிசை சவுந்தரராஜன்தேர்தல் வெற்றி குறித்து தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், "இனிவரும் காலங்களிலும் பி.ஜே.பி-யின் வெற்றி தொடரும். திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்ததோடு, காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஓரிரு இடைதேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை வைத்துக் கொண்டு, அக்கட்சி எழுச்சி பெற்றுவிடும் என சிலர் கூறிவந்தனர். ஆனால், 2 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்யமே கிடைத்துள்ளது.

பி.ஜே.பி. தற்போது அடைந்துள்ள வெற்றி, வரலாற்றுச் சாதனையாகும். இனிவரும் காலங்களிலும் பி.ஜே.பி-யின் வெற்றி தொடர்ந்துகொண்டேயிருக்கும். தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களிலும் தாமரை மலர்ந்துகொண்டேயிருக்கும்" என்றார்.

"சந்தர்ப்பவாதத்திற்குக் கிடைத்த வெற்றி!"

இடதுசாரிக் கட்சிகள் தோல்வி பற்றி கருத்துத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "இந்த வெற்றி மத்தியில் கே. பாலகிருஷ்ணன் - சி.பி.எம் மாநில செயலாளர்ஆட்சியில் உள்ள பி.ஜே.பி.-யின் அதிகார பலம், பண பலம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்குக் கிடைத்த வெற்றி. திரிபுராவில் 25 ஆண்டுகாலமாக அனைத்துப் பகுதி மக்களாலும் ஒரு நேர்மையான ஆட்சி; எளிமையான முதலமைச்சர், ஊழல் இல்லாத முதலமைச்சர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டவர் ஆட்சி நடந்து வந்தது. திரிபுராவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, மிகப்பெரிய அளவில் தலைவிரித்தாடிக்கொண்டிருந்த பிரிவினைவாத சக்திகளுடன் சுமூகப் பேச்சு நடத்தி தீர்வு ஏற்படுத்தினோம். அந்தச் சக்திகளால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை முடிவுக்குக் கொண்டுவந்தோம். மக்கள் மத்தியில் இருந்து அந்த சக்திகளைத் தனிமைப்படுத்தி, வன்முறை இல்லாத மாநிலமாக, அமைதியான மாநிலமாக மாற்றினோம். 

ஆனால், தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி, இடதுசாரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில், ஒரு பெரிய யுத்தத்தைக் தொடுத்து, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்டோர் நிர்வாகிகள் திரிபுராவிற்குப் படையெடுத்து, 15 நாள்கள் முகாமிட்டு, பணத்தைச் செலவு செய்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். 'மத்தியில் இருக்கும் அரசு, மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால்தான், உங்கள் மாநிலத்திற்கு வளர்ச்சி இருக்கும்' என்று பிரசாரம் செய்து, மக்களை நம்பவைத்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர்.  

ஈ.வி.எம். முறைகேடு

தவிர, 590-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக, ஏற்கனவே நாங்கள் தேர்தல் ஆணையத்தில் எங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளோம். மார்க்சிஸ்ட் ஆட்சியின் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தெரிவித்து, பி.ஜே.பி. வெற்றிபெறவில்லை. அம்மாநில மக்களில் ஒருசாரார், இத்தனை ஆண்டுகால ஆட்சிக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று கருதியிருக்கலாம். மத்திய ஆட்சியில் உள்ள கட்சி, ஆட்சி ஏற்பட்டால் மாநிலம் இன்னமும் வளர்ச்சியடையும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், பிரிவினைவாதிகளைத் தூண்டிவிடும் வகையில் பி.ஜே.பி. செயல்பட்டுள்ளதை, மக்கள் இனிமேல் உணர்வார்கள். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்ப்பதாகவும், தேச ஒற்றுமை என்றும் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி, திரிபுராவில் பிரிவினைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறது. 

பொதுவாக மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பவர்கள், ஒரு மாநிலத்தில் தேர்தல் என்று வரும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பிரசாரம் செய்வது வழக்கம். மத்திய அமைச்சர்கள் ஓரிருமுறை சென்று பிரசாரம் செய்வார்கள். ஆனால், பி.ஜே.பி-யோ மத்திய ஆட்சியை விரிவுபடுத்தும் வகையில் மாநிலத் தேர்தல்களை எதிர்கொண்டு வருகிறது. மாற்றுக்கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், அந்தக் கட்சிகளை எப்படியும் தோற்கடிக்க வேண்டும்; எதை வேண்டுமானாலும் செய்து, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அப்படி வெற்றி பெற முடியாத மாநிலங்களில், ஆளுநரைக் கொண்டு போட்டி சர்க்கார் நடத்துவதையும் பி.ஜே.பி. அரங்கேற்றி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதோடு, பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கக் கூடாது என்பதில் உறுதியோடு இருக்கிறோம்" என்றார்.

வெற்றி தொடருமா?

கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள், அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் சரியான உத்தியை இப்போதே வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் ஒருபுறம் நீடித்தாலும், இப்போதைக்கு சட்டசபைத் தேர்தல் வராது என்று நம்பலாம். ஆனால், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு ஏறக்குறைய ஓர் ஆண்டே உள்ள சூழ்நிலையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் உருவாகி இருப்பதையே திரிபுரா உள்ளிட்ட தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இடதுசாரிகளின் கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த மேற்குவங்கத்திலும் தற்போது அந்தக் கூட்டணிக்கு ஆட்சி இல்லாமல் போனது. தற்போது திரிபுராவும் கைவிட்டுப் போயிருக்கும் சூழலில், கேரளாவில் மட்டுமே இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்து வருகிறது. எனவே, 'வரும் முன் காப்போம்' என்ற கூற்றை மனதில்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகளை இப்போதே வகுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் மட்டுமல்லாது, இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க