தமிழக சட்டப்பேரவைச் செயலாளராகச் சீனிவாசன் நியமனம்!

தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக இருந்த பூபதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய செயலாளராகச் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவைச் செயலாளராகப் பூபதி கடந்த 2017-ம் ஆண்டு மே 31-ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 28-ம் தேதியுடன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து சட்டப்பேரவைச் சிறப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் சீனிவாசன், சட்டப்பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகருடன், ஆளுநர் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் முடிவுக்குக் கட்டுப்பட்டது என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையின் சிறப்புச் செயலாளராகச் சீனிவாசன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பேரவையின் கூடுதல் செயலாளர் வசந்தி மலர் மற்றும் இணைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், `பேரவை நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லாத சீனிவாசனை, சட்டப்பேரவையின் சிறப்புச் செயலாளராக நியமித்து, அவரையே சட்டப்பேரவைச் செயலாளராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளனர். இது விதிகளுக்குப் புறம்பானது. எனவே, அவரை சட்டப்பேரவையின் சிறப்புச் செயலாளராகவோ அல்லது செயலாளராகவோ நியமிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை (6.3.2018) விசாரணைக்கு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!