Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``ரவுடியிஸத்தை விடு... இல்லேன்னா துப்பாக்கிதான் பேசும்!’’ - போலீஸின் அடுத்த ஆபரேஷன்

துப்பாக்கி

'ரவுடித்தனத்தை விடவில்லை என்றால் என் துப்பாக்கி பேசும்' என்று சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலீஸ் உயரதிகாரி எச்சரித்தார். அதன்பிறகும் அந்த ரவுடி டீம், சென்னையில் பல சம்பவங்களில் ஈடுபட்டுவருவதால் அவர்கள் தொடர்பான பைல்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

சென்னையை அடுத்த மாங்காடு, மலையம்பாக்கம் கிராமத்தில் பிரபல ரவுடி பினு, கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடியபிறகு ரவுடிகளைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. என்கவுன்டர் என்ற ஆயுதத்தை போலீஸார் கையில் எடுத்தவுடன் பினு, போலீஸில் சரணடைந்தார். அவரது கூட்டாளிகள் கனகராஜ், விக்கி, சரவணன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். பினுவின் நண்பனாக இருந்து எதிரியாக மாறிய ராதாகிருஷ்ணன் சேலத்தில் சரணடைந்தார். உயிர்பயத்தில் ரவுடிகள் சரணடைவது தொடர்கதையாகிவிட்டது. இதனால், சென்னைப் புழல் சிறைச்சாலையில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. 

 இந்தச் சூழ்நிலையில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சீக்ரெட் ஆபரேசன் டீமை உருவாக்கியுள்ளார். இந்த டீம் நீண்ட காலமாக தலைமறைவாக இருக்கும் ரவுடிகளின் பட்டியலோடு தேடுதல் வேட்டையைத் துரிதப்படுத்தியுள்ளது. இந்த டீமில் உள்ளவர்களுக்குத் தேவைப்பட்டால் துப்பாக்கியைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் மதுரை, சிக்கந்தர் சாவடி பகுதியில் ரவுடிகள் மந்திரி முத்துஇருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது, தலைமறைவு ரவுடிகளுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னையில் டாப் லிஸ்ட்டில் உள்ள சில தலைமறைவு ரவுடிகள் தங்களுக்கு விசுவாசமான காக்கிகள் மூலம் சரண்டராகுவதற்கான நேரத்தைக் கேட்டு தூதுவிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்துவரும் நேரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தேடப்பட்டுவரும் வேளச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஒருவருக்கு போலீஸார் 'ஸ்கெட்ச்' போட்டுள்ளனர். அடுத்து, தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரைப் பிடிக்க மாதக்கணக்கில் தவம்கிடக்கிறது போலீஸ் டீம். 
 

போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஒருவர், இன்று ரியல் எஸ்டேட் அதிபர் என்ற போர்வையில் சமூகத்தில் செல்வாக்குடன் இருக்கிறார். அவரது ஹிஸ்டரி பைலை சமீபத்தில் போலீஸார் தூசிதட்டி எடுத்துள்ளனர். இவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற போலீஸ் நிலையங்களில் தொடர்ச்சியாக வழக்குகள் பதிவாகியிருந்தன. குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது போலீஸ் துணைக் கமிஷனராக இருந்த ஒருவர், சம்பந்தப்பட்ட கூலிப்படையின் தலைவனை நேரில் அழைத்து எச்சரித்தார். 'இனியும் உன் அராஜகம் தொடர்ந்தால் என்னுடைய துப்பாக்கிக்கு நீ பதில் சொல்ல வேண்டும்' என்று கூறியதையடுத்து அந்த டீம் அமைதியானது. தற்போது, அவர் எதிலும் நேரிடையாக தலையிடாமல் பின்னாலிருந்து இயக்கிவருகிறார். அவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். இதனால், அவர் மீது கை வைப்பதில் சிக்கல்கள் உள்ளன. அவரது வலதுகரமான வாசனைத் திரவியம் பெயரைக் கொண்ட அந்த நபர் இதுவரை தலைமறைவு பட்டியலில் இருந்துவருகிறார். கொலை வழக்கில் தேடப்படும் அவர், இன்னும் கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார். ஆனால், அவரையும் எங்களால் நெருங்கமுடியவில்லை. 

 ரவுடி

இந்த டீம் செய்த கொலைகள் 1990 களில் சென்னை போலீஸை அலற வைத்தது. கொலை செய்தவரின் உடலில் மீறி ஏறி கொக்கரித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஒருகட்டத்தில் சென்னை போலீஸாரின் என்கவுன்டரிலிருந்து அரசியல் செல்வாக்குக் காரணமாகத் தப்பினார். அவரது கூட்டாளிகளைக் கண்காணித்துவருகிறோம். விரைவில், தலைமறைவு ரவுடிகளைக் கூண்டோடு பிடித்து உள்ளே தள்ளிவிடுவோம்" என்றனர். 

  சேலத்தில் ரவுடிக்கு கேக் ஊட்டிய காக்கி விவகாரம் தமிழகக் காவல்துறையில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளுடன் கைகோத்துள்ள காக்கிகளின் பட்டியலும் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், இடம்பிடித்துள்ள காக்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. தமிழகத்தைவிட்டு ரவுடிகள் ஓடிவிட்டதாக ஜெயலலிதா கூறியதுபோல அவரது வழியில் ஆட்சியை நடத்துபவர்களும் தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்ற முயற்சி செய்துவருகின்றனர். ஆனால், அரசியல் செய்வதற்கு ரவுடிகளின் உதவி தேவைப்படுவதால் தீவிர ஆலோசனையில் ஆட்சியாளர்கள் உள்ளனர். 

 மோதிரம் பரிசு 

 வேளச்சேரியில் ரவுடிகள் டீம், மற்றவர்களைவிட கொஞ்சம் வித்தியாசமானவர்கள். இந்த டீமில் உள்ள ரவுடி, கொலை செய்ததற்காக தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. அடுத்து, அந்த ரவுடி விரும்பிய அனைத்தும் செய்துகொடுக்கப்பட்டது. தற்போது, அந்த ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு போலீஸிடம் சிக்கினார். தற்போது, கால், கை உடைக்கப்பட்டு சிறையிலேயே சிகிச்சை அளித்துவருகிறார் என்கின்றனர் போலீஸார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement
Advertisement

MUST READ

Advertisement