அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அமைப்புகள்மீது உடனே நடவடிக்கை! - ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாடு, நான்கு ஆண்டுகளுக்குப்பின்  முதல்வர் பழனிசாமி தலைமையில்  இன்று சென்னையில் தொடங்கியது. 

எடப்பாடி பழனிசாமி

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''மாவட்ட ஆட்சித்தலைவர்களும் மற்றும் காவல்துறை அதிகாரிகளும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதன் மூலம்தான் மாநிலத்தின் அமைதியை ஏற்படுத்த முடியும். ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் இரு துருவங்கள்போல் செயல்படாமல், இரு கண்களைப்போல் செயல்பட வேண்டும். தீவிரவாதம் மற்றும் மதவாதத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். அதனால் புலனாய்வு அமைப்புகளைப் பலப்படுத்தி, பயங்கரவாத அமைப்புகள் உருவாகாமல் தடுக்க வேண்டும். தேசியப் பாதுகாப்புக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி

சாதி மோதல்கள் ஏற்படக்கூடிய பதற்றமான பகுதிகளை ஆட்சித் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும், தங்களுடைய கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அதுமட்டுமின்றி, இளைஞர்களிடையே தற்போது புதிதாகத் தலையெடுத்துள்ள கத்தி போன்ற ஆயுதங்களைப் பொது இடங்களில் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி சம்பந்தமாகப் பெறப்படும் புகார்கள் மீது, தற்போது அமலில் உள்ள 'தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம், 2003-ன்படி உரிய நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டினைத் தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, இவற்றினை முற்றிலுமாகக் களைய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

ஐஏஎஸ்-ஐபிஎஸ் மாநாடு

தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் பிரதான குறிக்கோள்.மேலும், கண்ணை இமை காப்பதுபோல் தமிழக மக்களை அரசு காத்து வருகிறது என ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!