மெரினா நினைவிடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஏன்? காவலர் மரணம் எழுப்பும் கேள்விகள் | The reason behind death of police officer

வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (05/03/2018)

கடைசி தொடர்பு:14:46 (05/03/2018)

மெரினா நினைவிடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஏன்? காவலர் மரணம் எழுப்பும் கேள்விகள்

காவலர் அருண்ராஜ் உடலின் இறுதிப்பயணம்

காவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் நியாயம் கேட்டு, முதல் முறையாக 'நீதி விசாரணை' கோரப்பட்டிருக்கிறது. இறந்துபோன  காவலரின் தந்தைதான் நீதி விசாரணைக்காகக்  குரல் கொடுத்திருக்கிறார். தமிழகக் காவல்துறை வரலாற்றில்  காவல் உயரதிகாரிகள், கேட்டறியாத ஒரு கோரிக்கையாக உள்ளதால், காவல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்  ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருக்கிறது. இங்கு பாதுகாப்புப்  பணியில் இருந்த காவலர் அருண்ராஜ்,  மார்ச் 4- ம் தேதி, அதிகாலை 4.55 மணிக்கு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறைப் பணிக்கு 2013-ம் ஆண்டு, தேர்வானவர் அருண்ராஜ். இவருக்கான காவலர் அடையாள எண் : 42104. மதுரை மாவட்டம், அவனியாபுரம் அடுத்த பெருங்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பா மலைராஜன், அம்மா பொன் அழகு. பி.காம், பட்டதாரியான அருண்ராஜ், நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு முயன்று வந்திருக்கிறார். 'காவலராகப் பணியில் சேர்ந்து, பின்னர் முயற்சி செய்தால்  20 விழுக்காடு சலுகை அடிப்படையில் முன்னுரிமை கிடைக்கும்' என்று நண்பர்கள் கூறியதால், காவலராகப் பணியில் சேர்ந்துள்ளார். குதிரையேற்றம், மோட்டார் சைக்கிள் சாகசம் போன்றவற்றில் அவ்வப்போது அருண்ராஜ் திறமையை நிரூபித்து வந்திருக்கிறார். காவலர் பணிக்குத் தேர்வான அருண்ராஜூக்கு, சென்னை புதுப்பேட்டை, ஆயுதப்படைக் காவலர் பிரிவில் பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 

வழக்கம்போல், காவலர் ஓய்விடத்திலிருந்து மார்ச்-3 ம் தேதி இரவு, அருண்ராஜ் பணிக்குக் கிளம்பியதாகக் கூறப்படுகிறது. காவலர்காவலர் அருண்ராஜ் அருண்ராஜுக்கு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கான பாதுகாப்புப் பணி ஒதுக்கப் பட்டிருக்கிறது. காவல் நிலைய வாசலில், 'பாரா' டியூட்டி பார்க்கும் போலீஸார் வைத்திருக்கும்  303 Bold Action Rifle  துப்பாக்கியுடன் அருண்ராஜ், பணிக்குச் சென்றிருக்கிறார். மார்ச்-4 ம் தேதி காலை 7 மணியளவில், அருண்ராஜ் பணியை முடித்துக்கொண்டு, ஆயுதப்படைப் பிரிவுக்கு வந்து சேர வேண்டும். ஆனால், அதிகாலை, 4.55 மணிக்கே அருண்ராஜ், காவல் பணி மொத்தமும் முடிவுக்கு வந்திருக்கிறது. கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், தாடைப்பகுதி நொறுங்கிப்போன நிலையில், ஜெயலலிதா சமாதிக்குப் பக்கத்திலேயே அருண்ராஜ் உயிரற்றுக் கிடந்திருக்கிறார். அண்ணா சதுக்கம் போலீஸார், அருண்ராஜ் உடலை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் பிற்பகல், அருண்ராஜ் உடல் சொந்த ஊரான மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.  தகவல் கிடைத்ததும், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், சம்பவ  இடத்துக்குச் சென்று  ஆய்வு நடத்தினார். அருண்ராஜ் தந்தை மலைராஜன், "நேற்றிரவுகூட என் மகன்   செல்போனில் பேசினான். ஊருக்குப் பணம் அனுப்புவதாகக்கூடச் சொன்னான்.  எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாகத்தான்  எங்களிடம் போனில் பேசினான். உறவினர்களை விசாரித்தான். அவன் குரல் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால், மறுநாள் காலை 6 மணிக்கு ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் போனில் கூப்பிட்டு, 'உங்கள் மகன் தற்கொலை செய்துகொண்டார்' என்று  சொன்னபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அருண்ராஜ், தற்கொலை செய்துகொள்கிற மனநிலையில் கொஞ்சமும் இல்லை.  இந்த மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம்  இருக்கிறது. என் மகன், மரணம் குறித்து, உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

பணிச்சுமை, மேல் அதிகாரிகள் கொடுத்துவரும் அழுத்தம், நோய் இப்படிப் பல்வேறு காரணங்களால் போலீஸார் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆனாலும், இதுவரையில் காவலர் ஒருவரது மரணத்துக்கு நீதி விசாரணை கோரி யாரும் குரல் கொடுத்தது இல்லை. முதல் முறையாகக் காவலர் அருண்ராஜின் தந்தை, மலைராஜன் குரல் கொடுத்திருக்கிறார். முதல்நாள் இரவு வரையில் தன்னோடும், குடும்பத்தாரோடும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த மகன்,  அடுத்த 8 மணி நேரத்தில் இறந்து போனதாகச் சொல்லப்படுவதை, இதயம் உள்ள எந்தத் தந்தையாலும் ஏற்க முடியாது என்பதே யதார்த்தம். உயிருக்கும் உடமைக்கும் எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்று கருதக்கூடிய இடங்களுக்கு மட்டுமே துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அப்படிப்பட்ட  இடமாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள்  அரசாலும், காவல்துறையினாலும் கருதப்பட்டிருக்கிறது. "எம்.ஜி.ஆர். நினைவிடமாக மட்டுமே இந்த இடம் இருந்தபோது, துப்பாக்கி ஏந்திய போலீஸார் இங்கு நிறுத்தப்படவில்லை. ஜெயலலிதா நினைவிடமும் இங்கே அமைந்த பின்னர்தான், துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டனர்" என்கின்றன, காவல் வட்டாரங்கள்.


டிரெண்டிங் @ விகடன்