வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (05/03/2018)

கடைசி தொடர்பு:13:45 (05/03/2018)

சாலையில் கழன்று ஓடிய அரசு பஸ் சக்கரங்கள்! அலறிய பயணிகளின் உயிரைக் காத்த டிரைவர்

அரசு பஸ்

பேருந்துக்கட்டணத்தைப் பல மடங்கு தமிழக அரசு உயர்த்தியபோதும் பேருந்துகளை முறையாகப் பராமரிப்பு செய்யாததால், தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன. தருமபுரியில் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் டயர் கழன்று ஓடிய சம்பவம் பொதுமக்களைப் பீதியடைய வைத்துள்ளது.

தருமபுரியிலிருந்து காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பந்தாரஹள்ளிக்கு, 6ஏ டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு பந்தாரஹள்ளியிலிருந்து பாப்பாரப்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த 6ஏ பேருந்தைப் பிரபாகரன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். அப்போது பேருந்தில் 5 பயணிகள் இருந்துள்ளனர். பஸ் பாப்பாரப்பட்டி அருகே வந்தபோது திடீரென்று பேருந்தின் பின் சக்கரம் இரண்டும் கழன்று ஓடியதால் பேருந்து நிலைதடுமாறியுள்ளது. பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லாம் அலறித்துடித்துள்ளனர். பஸ் ஓட்டுநர் பிரபாகரன் சாமர்த்தியமாகப் பஸ்சை நிறுத்தியதால் பெரிய அளவில் விபத்து நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் சிறுகாயம்கூட இல்லாமல் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளனர்.

அரசு பஸ்

தமிழக அரசு, பஸ் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியபோதும், பேருந்துகளை முறையாகப் பராமரிக்காமல் இருப்பதை இந்தச் சம்பவம் உறுதி செய்துள்ளது. ஆனால், இன்னமும் பொதுமக்கள் வேறு வழியின்றி அரசுப் பேருந்துகளில் தங்கள் உயிரைப் பணயம் வைத்துதான் பயணம் செய்து வருவதாகத் தருமபுரி மாவட்டப் பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.