ஆண்டிமடத்திலிருந்து புதுச்சேரி மியூசியத்துக்குச் சென்ற நந்தி சிலை!

ஒண்ணே கால் லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நந்தி சிலை புதுச்சேரி மியூசியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நந்தியின் தத்ரூபத்தைப் பார்த்து மியூசியம் அதிகாரிகள், ஸ்தபதியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

நந்தி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடத்தில் நந்தி சிலை தயாரிக்கப்பட்டு புதுச்சேரி மியூசியத்துக்கு அனுப்பப்பட்டது. ஆண்டிமடம், சிலை வடிப்பதற்குப் பேர்போன கிராமம். ஆண்டிமடம் டு விருத்தாசலம் சாலையில் வசிப்பவர் கோபு. இவர் பஞ்சலோக சாமி சிலைகள் வடிக்கும் ஸ்தபதி. கடந்த 22 வருடங்களாகப் பலவிதமான சிலைகளை வடித்துக்கொடுத்துள்ளார். மகாபலிபுரத்தில் நுண்கலை பட்டப்படிப்பு படித்து முடித்து சிலைகள் செய்யத் தொடங்கியவர், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளை வடித்துள்ளார். ஒவ்வொன்றும் அரசு அங்கீகாரம் பெற்று அமெரிக்கா, தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறார். அதேபோல் செம்பு, பித்தளை போன்ற இரண்டு உலோகங்களால் செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை சுவிட்சர்லாந்து மியூசியத்துக்கு அனுப்பப்பட்டது.

இவரின் சிறப்புகளை அறிந்த புதுச்சேரி க்ரியோ ஆர்ட் கேலரி (மியூசியம்) க்கு நந்தி சிலை செய்துகொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அதன்படி இரண்டரை அடி உயரமும், மூன்று அடி நீளமும் கொண்ட நந்தீஸ்வரர் சிலை ஒண்ணே கால் லட்சம் மதிப்பில் கடந்த இரண்டு மாதமாகச் செய்யப்பட்டு தற்போது புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சிலையைப் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டுச் சென்றனர். நந்தியின் தத்ரூபத்தைப் பார்த்து மியூசியம் அதிகாரிகள் ஸ்தபதியைப் பாராட்டியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!