`தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீள்வோம்!’ - விடைபெறும் மாணிக் சர்க்கார்

`திரிபுராவில் தோற்போம் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை’ என்று பதவி விலகிய மாணிக் சர்க்கார் கூறியுள்ளார். 

Manik Sarkar

தேர்தல் தோல்விக்குப் பிறகு, முதல்முறையாகப் பேட்டியளித்த மாணிக் சர்க்கார், ''இதுபோன்ற முடிவை எதிர்பார்க்கவில்லை. தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீள்வோம். பழங்குடியினரும் சில குறிப்பிட்ட சமுதாயத்தினரும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அரசியலில் தோல்வியும் ஓர் அங்கம்தானே'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி தன் பணபலம், அதிகாரம் போன்றவற்றை வெற்றி பெற பிரயோகித்ததாக மார்க்சிஸ்ட் கட்சி நேற்று குற்றம் சாட்டியிருந்தது.

பதவி விலகிய மாணிக் சர்க்கார் ராஜினாமா கடிதத்தை நேற்று திரிபுரா ஆளுநர் தாதங்கதா ராயிடம் அளித்துள்ளார். திரிபுரா புதிய முதல்வராக 48 வயது பிப்லப் குமார் தெப் பதவியேற்க உள்ளார். எளிமையான முதல்வர் என்று அழைக்கப்படும் மாணிக் சர்க்காரை நேற்று சந்தித்த பிப்லப் குமார் தெப் அவரிடம் வாழ்த்து பெற்றார்.

திரிபுராவில் 2013-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. தற்போது, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 43 தொகுதிகளைப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 35 தொகுதிகள் கிடைத்துள்ளன. இந்தக் கட்சிக்கு 43 சதவிகித வாக்குகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 42.3 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. பழங்குடியின மக்கள் நிறைந்த 8 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திரிபுராவிலும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மாணிக் சர்க்கார் ஒருவர்தான் மாநிலம் முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!