வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (05/03/2018)

கடைசி தொடர்பு:16:25 (05/03/2018)

'9 வயது ரித்திஷை ஏன் கொன்றேன்?' கொலையாளியின் வாக்குமூலம்


                            கடத்தல் கொலை க்ரைம்

 கடத்தல் எதற்காக நடந்தது ? பணத்துக்காகக் கடத்தினார்களா ? சிறுவன் மீட்கப்பட்டானா?... கடந்த 1-ம் தேதி இப்படித்தான் சந்தேகத்துடன் சுற்றி வந்தது அந்தத் தகவல்... அடுத்த சிலமணி நேரங்களில் 'பணத்துக்காக சிறுவன் கடத்திக் கொலை' என்று மாறியது. கொலையாளி பிடிபட்ட தகவல் வெளியானபோது, முறை தவறிய உறவும், அந்த உறவு துண்டிக்கப்பட்டபோது விளைந்த காமக்கோபமும்தான் கொலைக்குக் காரணம் என்ற அடுத்தக்கட்டத் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட சிறுவன் ரித்தேஷ் சாய். சிறுவனின் பெற்றோர் மஞ்சுளா- கார்த்திகேயன். சிறுவனைக் கொலை செய்தது, மஞ்சுளாவின் ரகசியக் காதலன் நாகராஜ். இப்போது நாகராஜ் சிறையிலும், சிறுவன் ரித்தேஷ்சாய் புகைப்படத்திலும் இருக்கிறார்கள். 'சொத்துகளை அபகரிக்க, என் மனைவி மஞ்சுளாவே திட்டம் போட்டுக் கொடுத்து இந்தக் கொலைக்குத் துணை போயிருக்கிறார்' என்று கதறும் கார்த்திகேயன், இனி மஞ்சுளாவுடன் சேர்ந்து வாழும் வாய்ப்புகள் குறைவுதான்.பசியையும், காமத்தையும் வென்றுவிட்டால் எதையும் வென்றுவிடலாம் என்பார்கள்... இங்கே முறை தவறிய காமம், பெற்றெடுத்த பிள்ளையையே பலி கொடுக்க வைத்திருக்கிறது. மஞ்சுளாவும், கார்த்திகேயனும் கணவன் - மனைவியாக வாழ்ந்த, நெசப்பாக்கம், பாரதி நகரில் நுழைந்தால், அங்கு வசிக்கும் பொதுமக்கள், இந்தக் கொடூரம் குறித்த நினைவுகளில் மூழ்கிக் கிடப்பதை உணர முடிகிறது. "அந்த கார்த்திகேயன் நல்ல மனுஷன். ஏதோ டெக்கரேஷன் வேலைகளைப் பார்க்கிறார் என்று தெரியும். அவர் மனைவி மஞ்சுளாவைப் பார்த்தாலும் அப்படிப்பட்ட ஆளாகத் தெரியாது.  பார்க்க பூனை மாதிரி இருந்துகொண்டு, இதுபோல வேலையைப் பார்த்திருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது" என்கிறார்கள். 


போலீஸ் பிடியில் நாகராஜ்தேனி மாவட்டத்தைப் பூர்விகமாகக்கொண்ட மஞ்சுளா, தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில், அதிகாரியாகப் பணியாற்றுகிறார். பதவி உயர்வில்,சென்னை, மின்வாரியத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றலாகி, பின்னர் சென்னையிலேயே செட்டில் ஆனவர். தேனியில் இருக்கும்போதே மஞ்சுளாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. குறுகிய காலத்திலேயே கணவரை இழந்த மஞ்சுளா, அடுத்த சில ஆண்டுகளில் தன்னைவிட வயது குறைவான கார்த்திகேயனைத் திருமணம் செய்திருக்கிறார். இவர்களின் பிள்ளைதான் ரித்தேஷ்சாய்.  சென்னைக்குப் பணி மாற்றம் ஆனதால், நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரில்  கார்த்திகேயனுடன், மஞ்சுளா வசித்திருக்கிறார். காலையில் அலுவலகத்துக்குக் கிளம்பும்போது தம்பதியரில் ஒருவர்  ரித்தேஷ்சாயைப் பள்ளிக்குக் கொண்டுபோய் விடுவது வழக்கமாக இருந்துள்ளது. மாலையில்  ரித்தேஷ்சாயை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துப் போய்வருவதை மஞ்சுளா வழக்கத்தில் கொண்டிருக்கிறார். அங்குதான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ரித்தேஷ் சாய்க்கு, பக்கத்து வீட்டில் வசித்த நாகராஜ்,  பந்துகளைப் போட்டு உற்சாகப் படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில், நாகராஜைப் பார்ப்பதற்காகவே மகனை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துப் போக ஆரம்பித்திருக்கிறார் மஞ்சுளா. மனைவி மஞ்சுளாவின் பழக்க வழக்கங்களில் இருந்த மாற்றத்தைக் கவனித்த கார்த்திகேயன், மகன் ரித்தேஷ் சாயை, தானே  மைதானத்துக்கு அழைத்துப் போக ஆரம்பித்திருக்கிறார்... கணவனின் சந்தேகப் பார்வை தன்மீது விழுந்து விட்டதை மஞ்சுளா உணர ஆரம்பித்தபோதே அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துள்ளது.  பிரச்னைக்கு முடிவு கட்ட, அங்கிருந்து நெசப்பாக்கம், பாரதி நகருக்கு கார்த்திகேயன் வீட்டை மாற்றி இருக்கிறார். செல்போன் வசதி இருக்கும்போது வீட்டை எந்தப் பக்கம் மாற்றினாலும் பலனில்லை என்பதை கார்த்திகேயன் உணரவில்லை. மஞ்சுளா- நாகராஜ் ஜோடிகளின் சந்திப்பு இதற்குப் பின்னர்தான் அதிகமாகி இருக்கிறது. வீட்டுக்கு வந்து போகும் அளவுக்கு, அந்தக் கூடா நட்பு இன்னும் வலுத்திருக்கிறது. 'சென்னையில் பட்டா நிலங்களை வாங்கிப்போடத்தான் நாகராஜை சந்திக்கிறேன், அவருக்கு ரியல் எஸ்டேட் துறையில் அனுபவம் இருக்கிறது' என்று மஞ்சுளா சொன்ன   சந்திப்புக்கான காரணங்கள்  அந்த நேரத்துக்கு எடுபட்டாலும், அடுத்தடுத்த சந்திப்புகள், குடும்பத்தில் சண்டையை உருவாக்கி இருக்கிறது.  ஒரு கட்டத்தில், மஞ்சுளாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, "என் மனைவி மஞ்சுளாவிடம் நாகராஜ் என்கிற இளைஞர் அடிக்கடி வம்பு செய்கிறார்" என்று எம்.ஜி.ஆர்.நகர் போலீஸாரிடம் கார்த்திகேயன் புகார் செய்திருக்கிறார்.  போலீஸில், "நாங்கள் புகாரை விசாரித்து, நாகராஜை அழைத்து, பலமுறை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளோம். அந்த மஞ்சுளாவுக்கும் அதேபோல் பலமுறை கவுன்சிலிங் கொடுத்து அனுப்பினோம். பத்து வயதுக் குழந்தையின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாதே என்ற அக்கறையால் இந்த விஷயத்தை மென்மையாகக் கையாண்டோம். 'மஞ்சுளா மீதுதான் தவறு இருக்கிறது, ஒழுங்கு முறையுடன் போய் வாழப் பாருங்கள். பொய்ப் புகார் கொடுப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்' என்று, அவர் கணவர் கார்த்திகேயனுக்கும் அறிவுரை செய்து அனுப்பி வைத்தோம். ஆனால், இப்படி ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை" என்ற இன்ஸ்பெக்டர் தேவராஜூம், மஞ்சுளாவை வரவைத்து  மணிக்கணக்கில் வகுப்பு எடுத்திருக்கிறார். "இதுவரைக்கும் நடந்தது என்னவோ போகட்டும், உங்கள் கணவனைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நீங்களும் பொறுப்பான அரசுப் பதவியில், அதிகாரியாக இருக்கிறீர்கள். பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்தாவது நல்லபடியாக இருங்கள்" என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். கார்த்திகேயன், புகாருடன்  வருவது, போலீஸார் விசாரித்து, மஞ்சுளாவை  எச்சரித்து அனுப்புவது தொடர்கதையாகவே இருந்துள்ளது.இவ்வளவு நடந்த பின்னரும், சிறுவன் ரித்தேஷ் சாயைப் பள்ளிக்கும், ராமாபுரத்தில் உள்ள இந்தி டியூஷனுக்கும் மோட்டார் சைக்கிளில் கொண்டுபோய் விடுவதை மட்டும் நாகராஜ் நிறுத்தவில்லை, அதை மஞ்சுளாவும் தடுக்கவில்லை. பள்ளியிலும், டியூஷன் சென்டரிலும்  கார்த்திகேயனைவிட  அறிந்த முகமாக நாகராஜ்தான் இருந்துள்ளார்.


இந்நிலையில்தான் மீண்டும் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பிப்ரவரி 28-ம் தேதி மாலை, புகாருடன் போயிருக்கிறார். "ராமாபுரத்தில் டியூஷனுக்குப் போன  என் மகன் ரித்தேஷ் சாயைக் காணவில்லை"  அவர் கொடுத்த புகார், முந்தைய புகார்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புகார் என்பதாலும், சிறுவன் மாயம் என்பதாலும், போலீஸார் விசாரணையில் வேகம் காட்டியுள்ளனர். டியூஷன் சென்டரில் இருந்து மகனை அழைத்துப் போனது நாகராஜ்தான் என்ற தகவலால் போலீஸார், நாகராஜ் செல்போன் எண்ணை வாங்கி போன் செய்துள்ளனர்.  சுவிட்ச் ஆஃப்  ஆகியிருக்கவே, சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸார் உதவியை நாடியுள்ளனர். அவர்கள், நாகராஜின் செல்போன் எண், கடைசியாக சிக்னல் டவரைக் காட்டிய இடத்தைச் சொல்ல, போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, வேலூர் சத்துவாச்சாரி அருகே வந்துகொண்டிருந்த நாகராஜை வரும் வழியிலேயே போலீஸார் மடக்கி விட்டனர். அதேவேளையில், மஞ்சுளாவிடம், இன்னொரு போலீஸ் டீம் விசாரணையை கடுமையாக்கிக்கொண்டிருந்தது. "நாகராஜுக்கு சேலையூர் பக்கத்தில் நிறைய பேரைத் தெரியும். அங்குள்ள ஒரு பில்டிங்கில்  இன்சார்ஜ் ஆக டியூட்டி பார்க்கிறான்" என்று மஞ்சுளா இங்கே சொல்லிக்கொண்டிருக்க... மஞ்சுளா  சொன்ன அதே இடத்தில் ஒரு அபார்ட்மென்ட் வீட்டில், ரித்தேஷ் சாய்  வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கிடந்திருக்கிறான். 'மிஸ்ஸிங்' புகார், இப்படிக் கொலை வழக்காக மாறும் என்று போலீஸார் கொஞ்சமும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. பிப்ரவரி, 28-ம் தேதி மாலை, கொலை நடந்திருக்கிறது. மார்ச் 1-ம்  தேதி காலை, கொலையாளியைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.  மஞ்சுளா - நாகராஜ் இடையே இருந்த தகாத உறவுதான், போலீஸாருக்கு கிடைத்த முதல் துருப்புச்சீட்டாக இந்த வழக்கில் இருந்திருக்கிறது.போலீஸில் பிடிபட்ட நாகராஜ், "ராமாபுரத்தில் உள்ள டியூஷன் சென்டரில் இருந்து 28-ம் தேதி மாலை, ரித்தேஷ் சாயைக் கூட்டிக்கொண்டு பைக்கில் கிளம்பினேன். சேலையூர், இந்திரா நகரில் உள்ள அபார்ட்மென்டில் என்னை எல்லோருக்கும் தெரியும். அங்கு நான் போனபோது யாரும், வித்தியாசமாகப் பார்க்கவில்லை. ரித்தேஷ் சாயை உட்கார வைத்துவிட்டு மது அருந்தினேன். பின்னர் அதே பாட்டிலை உடைத்து ரித்தேஷ் கழுத்தை அறுத்தேன், கத்தினான்... வாயில் துணியை வைத்து அடைத்தேன். கொஞ்சநேரம் அப்படியே அவனை வைத்திருந்தேன். அவன் சாகவில்லை. உருளையாய் அங்கிருந்த இரும்பைக்கொண்டு அவன் கழுத்து, தலைப் பகுதிகளில் ஓங்கி அடித்தேன், உயிர் பிரிந்துவிட்டது. அதன்பின்னர் அறையைக் காலி செய்துவிட்டு வேலூருக்குப் போய் விட்டேன்" என்று நாகராஜின் வாக்குமூலம், இரக்கமே இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடைசியாக, "மஞ்சுளாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால், என் குடும்பத்தில் அனைவரும் என்னை ஒதுக்கிவைத்து விட்டார்கள், யாரும் பேசுவதுகூட இல்லை. என்னை மட்டும் அடிக்கடி போலீஸில் மாட்ட வைத்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்றிருக்கிறார், நாகராஜ். பி.காம். பட்டதாரியான நாகராஜை நம்பித்தான் அவருடைய குடும்பமே இருப்பதாக சொல்லப் படுகிறது.  மஞ்சுளாவின் உதவி இல்லாமல் இந்தக் கொலையை, நாகராஜ் செய்திருக்க முடியாது என்ற சந்தேகம் போலீஸாருக்கு இருப்பதால், அடுத்தடுத்த விசாரணைகளில் மிச்சமிருக்கிற சந்தேகக் கேள்விகளுக்கும் விடை தெரியவரும் எனலாம்.


டிரெண்டிங் @ விகடன்