வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (05/03/2018)

கடைசி தொடர்பு:16:05 (05/03/2018)

'பிரதமருக்கு அனுப்புங்கள்'- கலெக்டர் ஆபீஸை அதிரவைத்த த.மா.கா 'அல்வா'

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு த.மா.கா-வினர் அல்வா பார்சலுடன் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் பிரதமருக்கு, மாவட்ட ஆட்சியர் மூலமாக அல்வா அனுப்ப வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அல்வா பார்சலுடன் த.ம.கா-வினர்

நெல்லை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக, மாநில விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில், அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். கையில் அல்வா பார்சலுடன் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால்,  அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதுதொடர்பாக, காவல்துறையினருக்கும் த.மா.கா-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் பிரதமருக்கு அல்வா அனுப்ப வந்ததாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து த.மா.கா மாநில விவசாய அணித் தலைவரான புலியூர் நாகராஜன் கூறுகையில், ’’காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை அமைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளைச் சந்திக்கவும் பிரதமர் மறுத்துவிட்டார். இது வருத்தத்துக்கு உரியது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்புடைய செயல் அல்ல. இந்தச் செயலை த.மா.கா-வின் விவசாய அணி கண்டிக்கிறது. எங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் மூலமாக பிரதமருக்கு அல்வா அனுப்ப உள்ளோம். 

நெல்லை மாவட்டத்தில், செங்கோட்டை, வடகரை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் வாழை, தென்னை மற்றும் பயிர்கள் பதிப்பு அடைந்துள்ளதால், அவர்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றிலிருந்து பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்கு நீர் எடுப்பதை உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும். தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் செல்லக்கூடிய கோடகன் கால்வாய், நெல்லைக் கால்வாய், பாளையங்கால்வாய் உள்ளிட்டவற்றில் தடுப்புச் சுவர்களைக் கட்ட வேண்டும்.

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நெல்லை ராதாபுரம் பகுதிகள் பயனடையும் வகையிலான வெள்ள வடிநீர் கால்வாய் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும். விவசாயக் கடன்கள் அனைத்தையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்தோம். பிரதமரைக் கண்டித்து அல்வா அளிக்க வந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதால், தபால்மூலம் அனுப்ப உள்ளோம்’’ என்றார்.