வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (05/03/2018)

கடைசி தொடர்பு:15:29 (05/03/2018)

விளம்பர ஆசையில் பெண்ணிடம் பணத்தை ஏமாந்த தனியார் நிறுவன மேலாளர்!

போலி பில் தொடர்பான எப்.ஐ.ஆர்

போலி பில் கொடுத்து ஏமாற்றிய சென்னைப் பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். 

சென்னையைச் சேர்ந்த மகேஷ், தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், "நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறேன்.  தி.நகரைச் சேர்ந்த அலமேலு என்பவர், எங்கள் நிறுவனத்தை அணுகினார். எங்களது தயாரிப்புகளை விளம்பரம் செய்வதாகக் கூறினார். அதற்குரிய தொகையையும் நாங்கள் கொடுத்தோம். ஆனால், அவர் போலியாக பில் தயாரித்து, எங்களை ஏமாற்றிவிட்டார். அவர், எங்களை 28,77,596 ரூபாய் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, எங்களுக்கு மிரட்டல்விடுக்கிறார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

போலீஸ்

இதுகுறித்து மகேஷ் கூறுகையில், "எங்களது சினிமா தயாரிப்புகளை விளம்பரம்செய்ய அலமேலுவின் விளம்பர நிறுவனத்திடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தினோம். அதற்கான பில்லை எங்களிடம் அந்த நிறுவனம் கொடுத்தது. அந்த பில்களின்மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், சம்பந்தப்பட்டவர்களிடம் பில் தொடர்பாக விசாரித்தபோது, அலமேலுவின் நிறுவனம் கொடுத்த பில், போலி என்று தெரியவந்தது.  அதனால்தான், அவர்மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். போலி பில் கொடுத்து லட்சக்கணக்கில் எங்களை அலமேலு ஏமாற்றிவிட்டார்" என்றார்.  

 புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீஸார் விசாரித்துவருகின்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அலமேலு மீது மோசடி, நம்பிக்கை வைத்து ஏமாற்றுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவரிடம் விசாரிக்க, வீடு மற்றும் அலுவலகத்துக்குச் சென்றோம். ஆனால், அவர் அங்கு இல்லை. அதனால் அவரைத் தேடிவருகிறோம். விசாரணைக்குப் பிறகுதான் என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர்.