'அழிக்கப்பட்ட தடயங்கள்'- அபர்ணாவுக்காக 7 ஆண்டுகளாக நீதிகேட்டு போராட்டம்

ஏழு வருடங்களுக்கு முன்,  சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலைசெய்யப்பட்ட சிறுமி அபர்ணாவின்  வழக்கு, எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதைக் கண்டித்து, இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

அபர்ணா- போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ் நகரில், கடந்த 2011 மார்ச் மாதம் 9-ம் தேதி,  அபர்ணா என்ற 10-ம் வகுப்பு படித்துவந்த பெண், தன் தம்பியோடு வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மூவர், அவரை பாலியல் வன்கொடுமைசெய்து, பணம், நகைகளைக்  கொள்ளையடித்ததோடு, அந்தச் சிறுமியையும்  தூக்கில் மாட்டிவிட்டு ஓடிவிட்டார்கள். இந்தக் கொடுமை  பட்டப்பகலில் நடந்தேறியது. அப்போது, அவரைக் காப்பாற்ற யாருமில்லை. பெற்றோர் வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில், தனது தம்பியுடன் வீட்டில் இருந்த சிறுமிக்கு நேர்ந்த இந்தக் கொடுமை, அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தை உலுக்கியது. வழக்கும் பதியப்பட்டது.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த மூவரையும் அபர்ணாவின் தம்பி அடையாளம் காட்டியுள்ளார். அப்படியும்  காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது.  காரணம், அந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள், அரசியல், காவல்துறை பின்புலம் உள்ளவர்கள்.

அபர்ணா- போராட்டம்

புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல்துறை மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவசரமாக தடயங்களை அழித்தார்கள். அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனைசெய்து, சரியான தகவல்கள் பதியவில்லை என்றும், ஆசிரியர்களாக வேலைபார்க்கும் சிறுமியின் பெற்றோரின் அனுமதியின்றி, புதைப்பதற்குப் பதிலாக உடலை  எரித்துள்ளனர் என்றும் சரமாரியாக புகார்கள் எழுந்தன. தொடர் போராட்டங்களின் விளைவாக, அந்த வழக்கு 2013-ம் வருடம் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'காவல்துறையினர் இந்த வழக்கை சரியாகக் கையாளவில்லை 'என்று கண்டித்தார்கள். கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கடந்தும், அபர்ணா வழக்கில் நீதி கிடைக்காமல் கிடப்பில் கிடப்பதைக் கண்டித்து, புதுக்கோட்டையில் இன்று, வீர முத்தரையர்கள் அமைப்பின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடந்தது.

மேற்படி சம்பவத்தைக் கூறிய அமைப்பினர், "அபர்ணாவின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். அவர்கள், தங்கள் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிவருகிறார்கள். அவர்களுக்கே நீதி மறுக்கப்பட்டால், சாமானியர்களின் நிலை இன்னும் கொடுமையாகத்தானே இருக்கும். அபர்ணாவும் படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். அபர்ணாவின் வாழ்க்கையைச் சீரழித்த  மூவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான், இந்தக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!