வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (05/03/2018)

கடைசி தொடர்பு:16:12 (05/03/2018)

"இந்தச் சமூக நாற்றத்தை விட பிணங்களுடைய நாற்றம் பெருசா தெரியலை!" - 'திருநங்கை' வெட்டியான் அக்‌ஷயா

ள்ளிரவு... கோயம்புத்தூர் அருகேயுள்ள சொக்கம்புதூர் கிராமம்..அங்கே அமைதியைப் போர்த்தியிருந்த மயானம். காலையில் எரிக்கப்பட்ட ஒரு பிணத்தின் சாம்பலை, மறுநாள் காலையில் வரப்போகும் உறவினரிகளிடம் கொடுப்பதற்காகச் சேகரித்துக்கொண்டிருக்கிறார் அக்‌ஷயா. இவர் ஒரு திருநங்கை. ஒரு சின்னப் புன்னகையுடன் வரவேற்று, தனது 'பிறப்பு டு மயானப் பணி' பயணத்தைப் பேசுகிறார். 

திருநங்கை அக்‌ஷயா

''என் சொந்த ஊர் கோவையில் உள்ள சொக்கம்புதூர் கிராமம். அப்பா சின்ன வயசுலேயே எங்களை விட்டுட்டு எங்கேயோ போய்ட்டார். அம்மாதான் கஷ்டப்பட்டு என்னையும் அண்ணன் தம்பியையும் படிக்கவெச்சாங்க. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது என் உடல்மொழி, நடவடிக்கை எல்லாத்திலும் பெண் தன்மையை உணர்ந்தேன். வகுப்பு ஆசிரியர்கள், பசங்க எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. ரொம்ப அவமானமா இருக்கும். வேற வகுப்புப் பசங்களும் வகுப்புக்கு வந்து சீண்டிட்டுப் போவாங்க. இது பிரச்னை ஆனபோது, நான் அவங்ககிட்ட தவறா நடந்துகிட்டதா எனக்கு டிசி கொடுத்துட்டாங்க. அந்த அவமானத்திலிருந்து இன்னமும் என்னால் வெளிவர முடியலை'' என்றபடி அழுதவரை தேற்றினோம். 

''சுற்றி இருக்கிறவங்களின் நிராகரிப்பு கொடுத்த வலியைவிட, என் குடும்பம் நிராகரிச்சதுதான் அதிக வலியைக் கொடுத்துச்சு. பத்து மாசம் சுமந்த அம்மாவே என்னை வெறுத்தாங்க. அண்ணன், தம்பி எல்லோருடைய பார்வைக்கும் நான் ஒரு கேலிப் பொருளாகத் தெரிஞ்சேன். இதுக்கு மேல வீட்டுல வாழ முடியாதுன்னு, இருபது வயசுல வெளியே வந்துட்டேன். என் பெரியம்மாதான் அடைக்கலம் கொடுத்தாங்க. அங்கே பக்கத்து வீட்டில் இருந்தவங்கதான் வைரமணி அம்மா. அவங்க வெட்டியான் வேலை பார்த்துட்டிருந்தாங்க. நான் ஒரு தனியார் கடையில் வேலை செஞ்சுட்டிருந்தேன். என் கடை முதலாளி என்னை நல்லவிதமா நடத்தினார். ஆனால், முதலாளியின் பையன் என்னைச் சீண்டிட்டே இருப்பான். அந்தப் பாலியல் சீண்டல் தாங்க முடியாமல் வேலையை விட்டுட்டேன். பெரியம்மா குடும்பமே கஷ்டத்துல இருக்கும்போது நானும் தண்டமா இருந்து கஷ்டப்படுத்தறோமேனு நினைச்சு வேதனையோடு இருந்தேன். வைரமணி அம்மாகிட்ட 'என்னையும் வெட்டியான் வேலைக்குச் சேர்த்துப்பீங்களா?'னு கேட்டேன். முதல்ல தயங்கினாங்க. என் உறுதியைப் பார்த்து சேர்த்துக்கிட்டாங்க. அப்புறமா, தனியா தங்க ஆரம்பிச்சேன். 

திருநங்கை அக்‌ஷயா

என்னை வெறுக்கும் இந்தச் சமூகத்தின் நாற்றத்தைவிடப் பிணங்களின் நாற்றமும், மயானத்தின் நாற்றமும் பெருசா தெரியலை. மயானத்துல குழி வெட்டுறதில் ஆரம்பிச்சு எல்லா வேலையையும் பண்றேன். பிணத்தை எடுத்துவரும் சொந்தக்காரங்க என்னைப் பார்த்து ஆச்சர்யப்படுவாங்க. ஒழுங்கா வேலை நடக்குமானு தயங்குவாங்க. ஆனால், என் வேலையைப் பார்த்துப் பாராட்டிட்டுப் போவாங்க. இங்கேயே என் வாழ்க்கை நிம்மதியா போகுது. என்ன ஒண்ணு... சளி, காய்ச்சல்னு உடம்புக்கு வரும்போது உறவுகளின் நினைப்பு வரும். அக்கா, தம்பி, அண்ணன், தங்கச்சி என உறவுகள் மேலே ஒரு சகோதரியா பாசம் காட்ட விரும்புறேன். ஆனா, என்னைப் புரிஞ்சு ஏத்துக்க யாரும் தயாரில்லை'' என்ற அக்‌ஷயா குரலில் அன்புக்கான ஏக்கம். 

''பொதுவெளியில் பாலியல் சீண்டலோடும், கேலி கிண்டலோடும் இருக்கிறதைவிட இறந்துபோன மனுஷங்களை அடக்கம் பண்றது சிறந்ததுன்னு நினைக்கிறேன். எனக்கு இப்போ 21 வயசு. ராணுவத்துல வேலை பார்க்கணும். என் குடும்பத்தை சந்தோசமா வெச்சிக்கணும். மற்றவங்க மாதிரி ஒரு சராசரி வாழ்க்கை வாழணும் என எவ்வளவோ கனவு கண்டேன். அதெல்லாம் நிராசையா போய்ட்டாலும், கோயம்புத்தூரிலேயே நான்தான் முதல் திருநங்கை வெட்டியான் எனப் பெருமையா இருக்கு. ஒரு குழி வெட்டினால், ஐந்நூறு ரூபாய் கிடைக்கும். அதைவெச்சு என் பொழப்பை நடத்திட்டிருக்கேன். யாரையும் ஏமாற்றாமல், பிச்சை எடுக்காமல் உழைச்சு வாழறேன் என்கிற பெருமிதம் இருக்கு'' எனக் கம்பீரமாகச் சொல்கிறார் அக்‌ஷயா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க