அறிவாலய ஆய்வுக் கூட்ட நோக்கத்தைச் சிதைக்கும் மா.செ-க்கள்! - செயல் தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு...

ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தி.மு.க உடன்பிறப்புகளிடம் ஸ்டாலின் நடத்திவரும் ஆய்வு குறித்து ஆதங்கப்படுகின்றனர் நிர்வாகிகள் சிலர். 'ஆய்வால் எந்த அதிரடிகளும் அரங்கேறப் போவதில்லை. அந்தளவுக்குப் புகார் கூறிய தொண்டர்களை மாவட்டச் செயலாளர்கள் வளைத்துவிட்டனர். பெயரளவுக்குக் கூட்டம் நடந்து வருகிறது' என்கின்றனர் தி.மு.கவினர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியை மறுசீரமைக்கும் வகையில் அதிரடியாக பல மாற்றங்களைச் செய்து வருகிறார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அதன் ஒருபகுதியாக, கீழ்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்குத் திட்டமிட்டார். கழகத்தின் சீனியர்களான துரைமுருகன் உள்பட யாரையும் அருகில் வைத்துக்கொள்ளாமல், தொண்டர்களுடன் தனியே ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கிய ஆய்வுக் கூட்டம், மார்ச் 22-ம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. ' நீங்கள் கூறும் புகார்களின்பேரில் 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பேன்' என உறுதியாகக் கூறியிருந்தார் செயல் தலைவர். ஆனால், இதுவரையில் எந்த நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுவரையில், கோவை, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தேனி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களில் விரிவான ஆய்வை நடத்தி முடித்துவிட்டார். பெரும்பாலான புகார்கள் அறிவாலயம் மீதுதான் சுமத்தப்பட்டன. 'புகார் சொல்லப்படும் நபரின் கைகளில் நாங்கள் கொடுக்கும் மனுக்கள் இருக்கின்றன. அந்தளவுக்கு அறிவாலயத்தில் லஞ்சம் விளையாடுகிறது' எனச் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தனர் கோவை மாவட்ட உடன்பிறப்புகள் சிலர். 

இந்நிலையில், ஆய்வுக் கூட்டம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் அறிவாலய நிர்வாகி ஒருவர், " மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் ஆய்வுக் கூட்டம் நடந்து வருகிறது. 'கண்டிப்பாகச் செயல் தலைவர் நடவடிக்கை எடுப்பார்' என்ற நம்பிக்கையில் இருந்தவர்களும் தற்போது வேறு மனநிலைக்கு மாறிவிட்டனர். `மாவட்ட நிலவரங்களை ஸ்டாலின் புரிந்துகொள்வதற்கும் தொண்டர்கள் மத்தியில் இணக்கமான ஒரு சூழலை உருவாக்குவதற்கும் ஆய்வுக் கூட்டம் பயன்படும்' என நினைத்தோம். தவிர, அறிவாலயம் மீதுதான் அனைத்துத் தொண்டர்களும் புகார் கூறினர். இதன்பேரில் எந்தவொரு அறிவாலய நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஊராட்சிகளுக்கும் பகுதிகளுக்கும் எவ்வளவு நிர்வாகிகள் இருக்கிறார்கள்; அவர்களது பெயர்ப்பட்டியல் குறித்த எந்த விவரங்களும் முறையாகத் தொகுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகிகள் எழுதிக் கொடுப்பதுதான் பட்டியலாக இருக்கிறது. 

தொண்டர்களுடன் உணவருந்தும் ஸ்டாலின்

இந்த வரிசையின்படி யார் அழைக்கப்படுகிறார்களோ, அவர்களை மாவட்டச் செயலாளர்கள் தனியாகக் கவனித்துவிடுகின்றனர். இதுதவிர, ஸ்டாலினுடன் அமர்ந்து உணவருந்துவது முதல் அருகில் அமர வைப்பது வரையில் தனித்தனியாக ரேட் பேசுகின்றனர் அறிவாலய பிரமுகர்கள். இந்தவகையில் மட்டும் 25 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரையில் பணம் விளையாடுகிறது. 'அந்த நபர் என்ன பேச வேண்டும்?' என்பதையும் இங்குள்ள சிலரே முடிவு செய்கின்றனர். இப்படியிருக்கும்போது, கட்சியின் சீனியர்கள் மீது தொண்டர்கள் எந்தக் குறைகளையும் கூறுவதில்லை. ' நாம் என்ன சொன்னாலும் தலைமை நடவடிக்கை எடுக்கப் போவதில்லை' என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அறிவாலயப் பிரமுகர்களும், 'நாங்கள் மனது வைத்தால்தான் எதுவும் நடக்கும்' என்பதை தொண்டர்கள் மத்தியில் நிலைநிறுத்திவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் போல, 'இருக்கும்வரையில் சம்பாதித்துக் கொள்வோம்' என்ற மனநிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் செயல்படுகின்றனர்" என ஆதங்கப்பட்டவர், 

" ஒவ்வொரு நாள் ஆய்வுக் கூட்டத்திலும் யார் கலந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பிதழ் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரே ஒரு தாளைக் கொண்ட இந்த அழைப்பிதழுக்கு 25 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கின்றனர். ஆய்வுக் கூட்டம் தொடங்கிய காலகட்டத்தில் பலரும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். அப்படிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய நிர்வாகிகள் அனைவரும் வெகு இயல்பாக ஸ்டாலினுடன் பேசி வருகின்றனர். இதைக் கவனிக்கும் தொண்டர்கள் என்ன மாதிரியான சிந்தனைக்கு ஆளாவார்கள் என்பதை, தலைமை புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு மாதம் கடந்தும், இன்னும் எந்த நிர்வாகிகளும் நீக்கப்படவில்லை. சம்பிரதாயமாகக் கூடிக் கலையும் நிகழ்வாகவே, ஆய்வுக் கூட்டம் நடந்து வருகிறது" என்றார் விரிவாக. 

" அடிமட்ட அளவில் தொண்டர்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காகத்தான் ஆய்வு நடத்தி வருகிறார் ஸ்டாலின். இந்த ஆய்வில் கொடுக்கப்படும் அனைத்துப் புகார்களும், அன்பகத்தில் வைத்து தொகுக்கப்படுகின்றன. எந்த மாவட்டத்திலிருந்து அதிகப்படியான புகார்கள் வந்திருக்கின்றன என்பதையும் குறிப்பெடுத்து வைத்திருக்கிறார். ஆய்வுக் கூட்டம் நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு அதிரடிகளாகத் தொடரும்" என்கின்றனர் தி.மு.க சீனியர்கள் சிலர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!