வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (05/03/2018)

கடைசி தொடர்பு:16:22 (05/03/2018)

3 ஆண்டுகளுக்குப் பின் மர்மக் கொலையைக் கண்டுபிடிக்கவைத்த‌ 'மொட்டைக் கடிதம்'

 கொலை செய்யப்பட்ட குளோரி

சென்னையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் வழக்கு, போலீஸ் நிலையத்துக்கு வந்த மொட்டைக் கடிதத்தால் துப்பு துலங்கியுள்ளது. 

 சென்னை போரூர், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் குளோரி. இவர், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்துவந்தார். இவருக்கு உதவியாக, சரளா என்பவர் இருந்தார். இந்த நிலையில், 28.5.2015 அன்று குளோரியின் வீட்டுக்குள் நுழைந்த மூன்றுபேர், இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு, 15 சவரன் நகை, பணத்தைக் கொள்ளையடித்தனர். இதில், கொள்ளையர்களால் தாக்கப்பட்ட குளோரி, மூச்சுத்திணறி இறந்தார். இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம்.சி. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களைத் தேடினர். ஆனால், இந்த வழக்கில் எந்த துப்பும் துலங்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் கிடந்தது.

 இந்தச் சூழ்நிலையில், எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் நிலையத்துக்கு மொட்டைக்கடிதம் ஒன்று சமீபத்தில் வந்தது. அந்தக் கடிதத்தில், தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஒருவர், குளோரி கொலை தொடர்பாக போதையில் உளறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் தொடர்பாக, உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சங்கர்நாராயணன் மற்றும் போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான், குளோரியைக் கொலைசெய்தவர்களின் விவரங்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "குளோரி கொலை செய்யப்பட்டவுடன், அந்தப் பகுதியில் உள்ள செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தோம். குளோரி செய்யப்பட்ட தினத்தில் கால் டாக்ஸி டிரைவர் ஒருவருடைய செல்போன் சிக்னல், போரூர் பகுதியில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு, தூத்துக்குடியில் ஆன் ஆகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடிதத்திலும் தூத்துக்குடி டாஸ்மார்க் பார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செல்போன் நம்பர் குறித்து விசாரித்தபோது அது, சென்னையில் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் ஆரோக்கியசெல்வத்துக்குரியது என்று தெரிந்தது. இதனால் அவரை நாங்கள் ரகசியமாக கண்காணித்தோம். அப்போதுதான் குளோரியை ஆரோக்கியசெல்வம், நண்பர்கள் இருவருடன் சேர்ந்து குடிநீர் சுத்திகரிக்கும் கருவி விற்பதைப்போல நுழைந்து கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனால் ஆரோக்கியசெல்வத்தை கைது செய்துள்ளோம். தலைமறைவாக இருக்கும் அவரது நண்பர்களைத் தேடிவருகிறோம்" என்றார். 

 போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆரோக்கிய செல்வம் குறித்த தகவலை மொட்டைக்கடிதமாக போலீஸ் நிலையத்துக்கு அனுப்பியது, அவரது நண்பர் ஒருவர்தான். அந்த நண்பனின் மனைவியை ஆரோக்கிய செல்வம் சமீபத்தில் கிண்டலடித்துள்ளார். இந்த ஆத்திரத்தில்தான் ஆரோக்கியசெல்வம் கொலை செய்ததைக் கடிதமாக அவர் அனுப்பிவிட்டார். இதுவே, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குளோரி கொலையைக் கண்டறிய எங்களுக்கு துருப்புச்சீட்டாக அமைந்தது" என்றார்.