வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (05/03/2018)

கடைசி தொடர்பு:16:40 (05/03/2018)

"10 வருஷமா நச்சுக்காற்றைத்தான் சுவாசிக்கிறோம்"- கலெக்டரிடம் குமுறிய பொதுமக்கள்

கோவை சின்னவேடம்பட்டியில், 10 ஆண்டுகளாகப் பெரு நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுக்காற்றை சுவாசிப்பதாக, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கலெக்டரிடம் குமுறிய பொதுமக்கள்

கோவை சின்னவேடம்பட்டி அருகே, ராமகிருஷ்ணாபுரம், சக்தி நகர், ஐயப்பா நகர், LGB நகர், கோபாலகிருஷ்ண மில்ஸ் போன்ற பகுதிகள் உள்ளன. இந்நிலையில், அங்கு கடந்த 10 ஆண்டுகளாக, ஆபத்தை விளைவிக்கக்கூடிய  நச்சுக்காற்றை சுவாசித்துவருவதாக, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த மனுவில், "இந்தப் பகுதியில் ஏராளமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன. குறிப்பாக, இங்கு பி.ஜே.பி-யின் நந்தகுமாருக்குச் சொந்தமான 'அட்லாண்ட் பாலிமர்' என்ற நிறுவனம் உள்ளது. அங்கு, பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் கலந்த பொருள்களின் நச்சுக்காற்று, 24 நேரமும் வெளியேற்றப்பட்டுவருகிறது. இந்தக் காற்றைத்தான் நாங்கள் சுவாசித்துவருகிறோம். இதனால், எங்கள் பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு, கண் நோய், இதயப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.  இதுகுறித்து, அந்த நிறுவனத்திடமும் முறையிட்டோம், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதேபோல, அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, இதுபோன்று செயல்படும் நிறுவனங்களை அகற்றி, எங்களின் வாழும்சூழ்நிலையைச் செம்மைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.