வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/03/2018)

கடைசி தொடர்பு:19:10 (05/03/2018)

`பெருந்துறையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும்' - கொதிக்கும் கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடாத கட்சிகள், கொங்கு நாட்டில் புறக்கணிக்கப்பட வேண்டும்” என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பாக, ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன், “தமிழகத்துக்கு 50 சதவிகித வரி வருமானம் கொங்கு மண்டலத்திலுள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி மூலமாகக் கிடைக்கிறது. இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சாயக்கழிவுகள் மற்றும் தோல் தொழிற்சாலைக் கழிவுகள் மூலமாகத்தான் புற்றுநோய் உட்பட பல நோய்கள் கொங்கு மக்களைத் தாக்குகின்றன. பிழைப்புக்காக பிற மாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்துவந்த லட்சக்கணக்கான மக்கள், கொங்கு மண்டலத்தில் தங்கி வசித்துவருகிறார்கள். அப்படியிருக்க, எய்ம்ஸ் மருத்துவமனையை இங்கு அமைக்காமல், வேறு பகுதியில் அமைப்பது என்ன நியாயம். எய்ம்ஸ் மருத்துவமனை  ஏழைகளுக்கானதாக இருக்க வேண்டும். 

ஈ.ஆர்.ஈஸ்வரன் கொங்கு மண்டலம்

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, கடந்த வாரம் தமிழக முதலமைச்சரை தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்து, 10 லட்சம் நிதி அளித்தேன். அப்போது, அந்தத் துறையைச் சேர்ந்த மா.பா.பாண்டியராஜன் அவர்கள், ‘எங்களுக்கு 75 சதவிகித நிதி கொங்கு மண்டலப் பகுதியில் இருந்துதான் கிடைத்திருக்கிறது’ என்று கூறினார். அப்படிப்பட்ட மக்கள் வாழும் இந்த கொங்கு மண்ணில், எய்ம்ஸ் அமைக்க ஆட்சியாளர்கள் யோசிக்கலாமா? கொங்கு நாட்டுக்காரன் ஓட்டு போட்டுத்தானே ஜெயிச்சீங்க. எய்ம்ஸ் மருத்துவமனைக்காகப்  போராடாத கட்சிகள், கொங்கு நாட்டில் புறக்கணிக்கப்பட வேண்டும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை ஏமாற்றியது போல, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதிலும் கொங்கு மக்களைக் கொன்னுடாதீங்க” என ஆவேசப்பட்டார்.  

போராட்டத்துக்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஈஸ்வரன், “ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தேவையான அனைத்துத் தகுதிகள் இருந்தும், அமைக்காமல் இருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. மதுரை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், ‘எங்களுடைய பகுதியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்’ எனத் தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால், கொங்கு மண்டலத்திலுள்ள அமைச்சர்கள், ஒருவராவது பெருந்துறையில் எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்களா? தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு, பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்தகட்டமாக பொதுமக்கள், அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவர்களை ஒன்று திரட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.