வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (05/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (05/03/2018)

திருமலை திருப்பதியில் மார்ச் மாதம் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய தொகுப்பு!#Tirupati

திருமலை திருப்பதியில், இந்த மார்ச் மாதம் பல முக்கிய நிகழ்ச்சிகள்  நடைபெற இருக்கின்றன. 
அந்த நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இங்கே...


மார்ச் 18-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு. அன்றைய தினம், திருமலை வெங்கடாசலபதி கோயிலில் யுகாதி பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. அதேபோல, திருச்சானூர் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெற இருக்கின்றன.

திருப்பதி


'கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்'

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், உரிய ஏற்பாடுகள் விசேஷ கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.திருப்பதி மலைக்கோயிலில், 'கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்' எனும் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணி, வரும் 13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. 'கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்' எனும் இந்த நிகழ்ச்சி, ஆண்டுதோறும் 4 முறை நடத்தப்படுகிறது. 'பிரம்மோற்சவம்', 'வைகுண்ட ஏகாதசி', 'ஆனி வார அஸ்தனம்', மற்றும் 'தெலுங்கு வருடப் பிறப்பு' ஆகிய விழாக்களுக்கு முன்னதாக சுத்தம்செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அன்றைய தினம் நடைபெறும், 'அஷ்டதள பாதாள சேவா' ரத்துசெய்யப்படுகிறது.

அன்னமய்யா நினைவு நாள்!

அன்றைய தினம் (13.3.2018)  அலிப்பிரி பாதாள மண்டபத்தில், தாளப்பாக்கம் அன்னமய்யாவின் 515 - வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அப்போது, அன்னமய்யா வேங்கடவன் மீது மாறாத பக்தியுடன் இசைத்த பாடல்கள் இசைக்கப்படுகின்றன.

புஷ்ப யாகம்!

வரும் மார்ச் 14 -ம் தேதி, சீனிவாசமங்காபுரத்தில் இருக்கும் ஶ்ரீகல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புஷ்ப யாகம் நடைபெறுகிறது. 

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனம்! 

மாற்றுத்திறனாளிகள், 65 வயதைக் கடந்த முதியவர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்கள் ஆகியோருக்கான சிறப்பு தரிசன டோக்கன்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. இவர்கள், காலை 10 மணிக்கும் பிற்பகல்  3 மணிக்கும் வழக்கம்போல அனுமதிக்கப்படுவர். மார்ச் 7 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மட்டும், காலை 9 மணிக்கும் பகல் 1.30 மணிக்கும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதற்கேற்ப பக்தர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

பக்தர்கள் வருகைக்காக சிறப்பு ஏற்பாடுகள்!

திருமலை திருப்பதிக்கு, பக்தர்கள் கோடை விடுமுறையில் பெரும் திரளாக வருவார்கள்.  அவர்கள், சிரமமில்லாமல் தரிசனம் செய்வதற்கு வசதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம், நேரம், நாள் குறிப்பிடப்பட்ட  புதிய டோக்கன் தரிசன முறையை, இந்த மாத இறுதியில் அறிமுகம்செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய தரிசன முறையின் வாயிலாக, இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யமுடியும்.  இந்தப் புதிய அனுமதிச் சீட்டுகளை வழங்குவதற்காக, கீழ்த்திருப்பதி பேருந்து நிலையத்தில் புதிதாக கவுன்ட்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். திருமலையில் செய்யப்படும் தரிசன ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு பார்வையிட்டார். இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க