வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (05/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (05/03/2018)

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருமண உற்சவம்!

நாகை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில், இந்திர விழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்றிரவு (4.3.18) சுவேதாரண்யேஸ்வரர்-பிரம்மவித்யாம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர்

திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலையில் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. நேற்றிரவு 8 மணியளவில், கோயிலின் மூலவரான அகோரமூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்களுடன் தீபாராதனை காட்டப்பட்டது. சிவபெருமான் தனது ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் அகோரமூர்த்தியாக இங்கு காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்

மூலவருக்கு பூஜை முடிந்த பிறகு, உற்சவ மூர்த்தங்களான  சுவேதாரண்யேஸ்வரர்-பிரம்மவித்யாம்பாள் மலர் மலைகளால் அலங்கரிக்கப்பட்டு, இசை வாத்தியங்கள் முழங்க, பல்லக்கில் கோயில் பிராகாரத்தை வலம் வந்தனர். இந்த திருக்கல்யாண வைபவத்தின் முதல் நிகழ்ச்சியாக, 'மாலை மாற்றிக்கொள்ளுதல்' நடைபெற்றது. மணப்பெண்ணான அம்பாள், சிவபெருமானுக்கு பல்லக்கிலிருந்து ஓடி வந்து மாலை சூட்டுவதும், முதலில் விளையாட்டாக அதை வாங்க மறுக்கும் இறைவன் பின்பு ஏற்பதும், சிவபெருமான் தனது பல்லக்கில் சென்று அம்பாளுக்கு மாலை சூட்டுவதும் என மாறி மாறி நடந்த இந்நிகழ்ச்சி காண்பதற்கு தெய்வீகமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. 

இதைத் தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபம் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சல் அமைக்கப்பட்டிருந்தது. அதில், சிவபெருமானும் அம்பாளும் அமர்ந்து அருளினர். அவர்களுக்கு முன்புறம் திருக்கல்யாண ஆகுதி அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, திருமாங்கல்ய பூஜை செய்யப்பட்டது. இரவு 10 மணியளவில், இசை வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, சுவேதாரண்யேஸ்வரர்-பிரம்பவித்யாம்பாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திரு ஊஞ்சல் ஆராதனை செய்யப்பட்டது.

சுவேதாரண்யேசுவரர்-பிரம்மவித்யாம்பாள்

ஆலயத்துக்கு வந்த ஏராளமான பக்தர்கள் இந்த திருக்கல்யாணத் திருவிழாவை கண்டுகளித்தனர். விழாவின் முடிவில், பக்தர்கள் மணமக்களான இறைவனுக்கும் அம்பாளுக்கும் மொய் வைத்து சீர் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 5) பிட்சாடனர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் விழாவும், 63 நாயன்மார்களின் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது. நாளை (மார்ச் 6)  திருத்தேர் பவனியும், மார்ச் - 7 அன்று தெப்போற்சவ விழாவும் நடைபெற உள்ளது. அன்பர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு அருளாசி பெற உள்ளார்கள். 

"கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே...

எம்பிரானே, சிவனே போற்றி போற்றி!