வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/03/2018)

கடைசி தொடர்பு:20:13 (05/03/2018)

`ராஜினாமா செய்துவிட்டு மணலை விற்பனை செய்யுங்கள்' - அமைச்சர்களை வறுத்தெடுத்த பாலகிருஷ்ணன்!

``காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகத் தமிழக அரசியல் தலைவர்களைப் பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல்” என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  

பாலகிருஷ்ணன்

தூத்துக்குடியில் கடந்த மாதம் நடைபெற்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தூத்துக்குடி வந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''முதல்வர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகப் பிரதமரை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பிரதமர் மோடி சந்திக்க மறுப்பது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல்.

காவிரி மேலாண்மை விஷயத்தில் இதுவரை பிரதமர் வாய்திறக்கவில்லை. ஆறுவார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளை ஒன்றுதிரட்டி தமிழகம் தழுவிய போராட்டத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய பாசனத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். எனவே, அவர்மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.  நிதின் கட்கரியின்மீது மார்க்ஸிஸ்ட் கட்சியும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத் தமிழக எம்.பி-கள் பதவி விலகுவதில் தவறில்லை.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. தற்போது இது, திரிபுராவிலும் என வருகிறபோது இனியும் அமைதியாக இருக்க முடியாது. கம்யூனிஸ்ட்களின் ரத்தம் சிந்துவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சுற்றுப்புறத்துக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அரசு தடைவிதிக்க வேண்டும். மலேசிய மணலை விற்பதற்கு அமைச்சர்கள் தடைவிதிப்பது சரியல்ல. தேவையென்றால் அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மணலை விற்கலாம். ஆற்று மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தமிழக அரசின் ஊழில் குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்படும்’’ எனத் தரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க