வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (05/03/2018)

கடைசி தொடர்பு:20:20 (05/03/2018)

'அந்த' வார்த்தையால் திட்டிய பெண் எஸ்.ஐ! - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்

வாகனச் சோதனையின்போது, பெண் எஸ்.ஐ ஒருவர் ஆபாச வார்த்தையால் திட்டியதால், அவமானம் அடைந்த இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையினரைக் கண்டித்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல்- இளைஞர் தற்கொலை

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர், சின்னதுரை. இவர், டூவிலரில் வந்துகொண்டிருந்தபோது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த இரும்புலிக்குறிச்சி  பெண் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி அவரை மறித்து, வாகனத்துக்கான ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். எடுத்துக்கொடுத்தபோது, குடிவிட்டு வந்ததாகக் கூறி அவரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், டூவிலரைப் பறிமுதல்செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச்சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, வீட்டுக்குச் சென்ற சின்னதுரை, நடந்த சம்பவம்குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு,  வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டுத் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இளைஞர் தற்கொலை- மறியல்

உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரும்புலிக்குறிச்சி, உடையார்பாளையம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம். இல்லையேல் கலைந்துசெல்ல மாட்டோம்" என்று கூறியுள்ளனர். இந்நிலையில், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., கென்னடி, சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உரிய விசாரணை நடத்துவதாகக் கூறியதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

இளைஞர் சின்னதுரை

இதுகுறித்து சின்னதுரையின் குடும்பத்தாரிடம் பேசினோம். "சின்னதுரை குடித்துவிட்டு வந்தான் என்ற காரணத்தால், அவன்மீது வழக்கு போட்டது மட்டுமல்லாமல், அவனை அசிங்கமாகத் திட்டியிருக்கிறார் எஸ்.ஐ. அதோடு நிறுத்தாமல், அவன் திருமணம் செய்ய இருக்கும் குடும்பத்தாரிடம் சொல்லப்போவதாகவும் மிரட்டியிருக்கிறார். தம்பி குடிப்பான் என்பது பெண் வீட்டுக்குத் தெரிந்தால், பெண் கொடுக்காமல், ஊர் உலகத்துக்குத் தெரிந்து அசிங்கமாகிவிடும் என்பதற்காக தூக்கில் தொங்கிவிட்டான். இதுதான் காவல்துறையினர் செய்யும் வேலையா?  எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி சொன்னார். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையினரைக் கண்டித்து போராட்டம் நடந்த இருப்பதோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க இருக்கிறோம். காவல்துறையினரின் அடக்குமுறைக்கு சின்னதுரை உயிரே இறுதியாக இருக்கட்டும். வேறு யாருக்கும் இந்த மாதிரி நடக்கக் கூடாது. இவர்களே டாஸ்மாக் கடையை திறந்துவைப்பார்கள். அதில் குடித்துவிட்டு வந்தால், பிடித்து வழக்குப் போடுவார்கள்" என்று கொந்தளித்தார்கள்.