வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (05/03/2018)

கடைசி தொடர்பு:17:30 (05/03/2018)

`மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக் கூடாது' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக நித்தியானந்தா அறிவித்துக்கொண்டதை எதிர்த்தும் அவர் அத்துமீறி ஆதீன மடத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்க கோரியும் மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், ''மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக் கூடாது'' என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.  

நித்யானந்தா- மதுரை ஆதினம்


திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற மதுரை ஆதீன மடத்தில் 292 வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன், பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக அறிவித்து பரபரப்பு கிளப்பினார் அருணகிரிநாதர். அதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு பின், `நித்தியானந்தா இளைய ஆதீனம் அல்ல என்று தான் அறிவித்ததை ரத்து செய்தார். இதை எதிர்த்து நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியான தான், ஆதீன மடத்துக்குள் சென்று பூஜை செய்ய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் நித்தியானந்தா தன்னை ஆதீனமாக அறிவித்துக்கொள்ளக் கூடாது. ஆதீன மடத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், 'ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து இன்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மடங்களில் வாரிசு நியமிப்பது பற்றி, வழிகாட்டுதல் என்னவென்பது பற்றி அறநிலையத்துறை பதில் அளிக்கக்கோரி விசாரணையை ஒத்திவைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க