வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (06/03/2018)

கடைசி தொடர்பு:16:45 (06/03/2018)

பலே வருமானம் கொடுக்கும் பசுமைக்குடில் ... விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் புதிய தொழில்நுட்பம்! #PolyhouseFarming

வீனத் தொழில்நுட்பமான பசுமைக்குடில் விவசாயத்தில் கலக்கிவருகிறார் இளம் விவசாயி ரமேஷ்குமார். கண்ணாடிபோல் ஓடும் அமராவதி வாய்க்கால் தண்ணீர், பச்சைப்பசேல் நெல்வயல்கள்,  தோகை விரித்தாடும் கரும்புத்தோட்டங்கள். கீற்றுத் தாலாட்டும் தென்னை மரங்கள் என்று பாரம்பர்ய விவசாயத்தைப் பறைசாற்றிக்கொண்டிருந்தாலும், நவீனத் தொழில்நுட்ப விவசாயத்தையும் மேற்கொண்டுவருகிறார் ரமேஷ்குமார்.

அவர் நடைமுறைப்படுத்தி வரும் தொழில்நுட்பம் 'பாலிஹவுஸ்' (polyhouse farming) எனப்படும் பசுமைக்குடில் விவசாயம். அதில் வெங்காய விவசாயத்திற்குத் தேவையான நாற்றங்கால் உற்பத்தியை மேற்கொண்டுவருகிறார். அவரிடம் பேசினோம்.

"நெல், கரும்பு ஆகிய ரெண்டு பயிர்களை மட்டுமே போகம் தவறாமல் மாத்தி மாத்தி பயிர் செய்யும் அமராவதி பாசன விவசாயி நாங்க. 25 ஏக்கர் நஞ்சை நிலத்துல பல வருஷமா இதுதான் நடக்குது. என்னதான் கரும்பும் நெல்லும் போட்டிபோட்டு வெளைஞ்சு மகசூல் எடுத்தாலும் அதுக்கு கட்டுப்படியாகும் விலை பல நேரங்களில் கிடைப்பதே இல்லை. ஒரே மாதிரியான விவசாயம் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்த, இதில் ஏதாவது வித்தியாசமாகச் செய்யமுடியுமா என்ற யோசனையில் இருந்தபோதுதான் பசுமை விகடனில் வெளியான பசுமைக்குடில் விவசாயம் சம்பந்தமான கட்டுரை எங்களை மாத்தியோசிக்க வெச்சது. வீட்ல இருக்கிறவங்க கிட்ட பசுமைக்குடில் விவசாயம் பத்தி சொன்னேன். தாராளமா செய்யலாம்னு பச்சைக்கொடி காட்டினாங்க.

பசுமைக்குடில் விவசாயம்

மாதிரி படம்

எங்களுக்குச் சொந்தமான மானாவாரி நெலம் 4 ஏக்கர் ஓரிடத்தில் இருக்கு. நல்ல செம்மண் பூமி. அதுல மக்காச்சோளம் மட்டும்தான் விதைப்போம். வடிகால் வசதியுடைய காற்றோட்டமான அந்த நெலம்தான் பசுமைக்குடில் அமைக்கத் தோதான இடம்னு முடிவுசெஞ்சோம். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அலுவலகம் போய் முறைப்படி மானியத்தில் பசுமைக்குடில் அமைக்கப் பதிவு செஞ்சோம். தொடர்ந்து, 5 டன் மட்கிய தொழு உரம், அதுகூட வேப்பன்பிண்ணாக்கு 50 கிலோ, 10 பாக்கெட் உயிர் உரங்கள் இந்த மூணு இடுபொருள்களையும் கலந்து பசுமைக்குடில் அமைக்கவுள்ள நெலத்துல இரைச்சு விட்டு, ரெண்டு தடவை உழவு செய்ய மண் பொலபொலனு ஆயிடுச்சு.

முதலில் குடை மிளகாய்... அப்புறம் தக்காளி

விண்ணப்பம் கொடுத்த சில மாதங்களில் நேரில் வந்து மண் பரிசோதனை மற்றும் தண்ணீர் உள்ளிட்ட ஆய்வுகளை செஞ்சு, அது விதிகளின்படி இருந்ததையடுத்து, ஏற்கெனவே நாங்க தேர்வு செஞ்சு நிலத்தயாரிப்பு 50 சதவிகிதம் மானியத்தில் 1000 சதுர அடியில் (25 சென்ட்) பசுமைக்குடில் அமைச்சுக்கொடுத்தாங்க. உடனடியாக ‘மழைத்தூவான் பாசனக் (பாகர்) கருவிகளையும் மானியத்தில் பொருத்திக்கொடுத்தாங்க. 3 அடி இடைவெளியில 1அடி உயரமுள்ள நீளமான மேட்டுப்பாத்தி அமைச்சு, குடை மிளகாய் நாத்துக்களை நடவு செஞ்சேன். தொடர்ந்து கடலைப்பிண்ணாக்கு 25 கிலோவை தண்ணீரில் கலந்து 15 நாள் இடைவெளியில செடிக்குச் செடி ஊத்தினேன். பசுமைக்குடில்ல 90 சதவிகிதம் பூச்சித்தாக்குதல் ஏற்படாது. பூஞ்சான் சம்பந்தமான நோய், பச்சைப்புழு போன்றவை உற்பத்தியாகலாம். அதைபோக்க இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகிய மூணு பொருள்கள் கலந்த 3ஜி கரைசலை தயாரித்து 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் அளவில் கலந்து தெளித்து அதைக் கட்டுப்படுத்தலாம்.

நடவு செஞ்ச 90வது நாளிலிருந்து குடைமிளகாய் பறிப்புக்கு வரும். 1000 சதுர அடியில் பயிர்செஞ்ச 6,000 செடிகளிலிருந்து, 3 டன் மகசூலை எடுத்தேன். தொடர்ந்து ஒரே பயிரை வைத்து பசுமைக்குடில் விவசாயம் செய்யக் கூடாது என்பதால் மாற்றுப்பயிர் என்ன செய்யலாம்னு யோசனையில் இருந்தோம். தக்காளி நடவு செய்யலாம்னு விருப்பம் ஒரு பக்கம் இருந்திச்சு. ஆனா, அந்த சமயத்துல தக்காளி விலை அதளபாதாளத்துல போய் நின்னுது. சந்தைக்கு கொண்டுபோன தக்காளிக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காம தார் ரோட்ல கொட்டிவர வேண்டிய நிலைமையில இருந்தாங்க விவசாயிங்க. தக்காளி விலை இப்படி இருக்க, அதுக்கு நேர் மாறாக தாறுமாறா எகிறி கொண்டிருந்திச்சு சின்னவெங்காய விலை. தொடர்ந்து பல மாதங்களாக கிலோ 100 ரூபாய் அளவுக்கு விலை உச்சம் இருந்திச்சு. நடவு செஞ்ச 100 நாள்ல அறுவடைக்கு வரும் குறுகிய காலப்பயிரான சின்ன வெங்காயத்தை, அறுவடை முடிஞ்ச கரும்பு வயல்ல நடவு செய்யலாம்னு முடிவு செஞ்சோம்.

பசுமைக்குடில் விவசாயம்

நாற்றங்கால் முக்கியம்!

சாம்பார் வெங்காயம்னு சொல்ற சின்ன வெங்காயச் சாகுபடியை ரெண்டு முறையில செஞ்சு வர்றாங்க விவசாயிங்க பலரும். திருச்சி, பெரம்பலூர், ஒட்டன்சத்திரம் பகுதியில நேரடி விதைப்பாக விதை வெங்காயத்தை நடவு செய்வாங்க. 70 நாள்ல அறுவடைக்கு வந்திடும் மிகக் குறுகிய காலப்பயிர்ல இருந்து ஏக்கருக்கு 7 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் காய்கறிப் பயிர்களில் சின்ன வெங்காயம் முதலிடத்துல இருக்கு. ஏக்கருக்கு 700 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். அந்த நேரத்துல விதை வெங்காயமே கிலோ 70 ரூபாய்வரைக்கும் வெலை போச்சு. அதுவும் மூணு மாசம் இருப்பு வெச்சிருக்கும் பழைய வெங்காயமா இருக்கணும். அதை இருப்பு வெச்சிருக்கும் விவசாயிங்க அதிகம் பேர் துறையூர் பக்கத்துலதான் இருக்காங்க. 300 கிலோ மீட்டர் போய் அவங்கள தேடிப்பிடிச்சு, வேன் வெச்சுக் கொண்டுவரணும். அதுவும் இல்லாமல் ஏக்கர் ஒண்ணுக்கு விதை வெங்காய செலவே 41,000 ரூபாய் பிடிக்குது. எங்க திட்டப்படி 5 ஏக்கர் நடவு செஞ்சா விதைக்கே 2 லட்சம் ரூபாய் வேணும். அது போக சாகுபடி செலவு ஏக்கருக்கு 50,000 ரூபாய் ஆயிடும். அதையெல்லாம் கணக்குப்போட்டு பார்த்தோம். சிக்கலாக தெரிஞ்சது. விதை வெங்காய நடவு முறைய கை விட்டோம். ஆனா, சின்ன வெங்காய வெள்ளாமை வைக்கணும்ங்கிறதுல உறுதியா இருந்தோம்.பசுமைக்குடில் விவசாயம்

அதனால, சின்ன வெங்காய சாகுபடியில இன்னொரு முறையான நாற்றங்கால் முறை வெங்காய சாகுபடியைத் தேர்வு செஞ்சோம். அதுக்கான வெங்காய விதைகள் உள்ளூர் விவசாய அங்காடிகள்ல வேண்டிய அளவு கிடைக்குது. சின்ன வெங்காயம் ஒரு மென்மையான பயிர். அதை நடவு செய்வதுக்கான நாற்றங்கால்  எல்லா ஊர்லையும் எல்லா மண்ணுலையும் வளராது. அதிக வெயிலும் அதிக நிழலும் இல்லாத ஒரு சீதோஷ்ண நிலையிலதான் அதை வளர்த்துக் கொண்டுவர முடியும். பிறந்த குழந்தைகளை பராமரிப்பது போல கண்ணும் கருத்துமா கவனிக்கவேணும்.

அதனால, வெங்காயம் நடவு செய்யும் விவசாயிங்க பலரும் அவங்க வயல்ல சொந்தமா நாற்றங்கால் விடுவது இல்லை. நாற்றங்கால் பாத்தி பாராமரிப்பில் அனுபவம் உள்ள பலர் அதை ஒரு விவசாயமாகச் செஞ்சு நாற்றுக்களை உற்பத்தி செஞ்சு விற்பனை செய்யறாங்க. அவங்ககிட்ட போய் பணம் கொடுத்து நாற்றுக்கள் வாங்கி வந்து நடவு செய்யறாங்க. நாற்றங்கால் வளரக்கூடிய சீதோஷ்ண நிலை பசுமைக்குடில்ல இருந்திச்சு. அதனால நம்ம வயலுக்குத் தேவையான நாற்றுக்களை சொந்தமாக உற்பத்தி செஞ்சுக்க முடிவு செஞ்சு. அதற்கான ஆயத்த வேலைகளை பசுமைக்குடில்ல செய்ய ஆரம்பிச்சோம்.

பசுமைக்குடில் விவசாயம்

மாதிரி படம்

பசுமைக்குடில் பாலி துணிகளைச் சுருட்டி விட்டு. அடியுரமா 5டன் ஆட்டு எருவைக் கொட்டி இரைச்சு, பவர்டிரில்லர் டிராக்டர் மூலமாக உழவு செய்து, அதைதொடர்ந்து  9 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட 50 பாத்திகளை மட்டும் அமைச்சோம். ஏக்கருக்கு 1 கிலோ வெங்காய விதை போதுமானது. நாங்க 15 ஏக்கர்ல வெங்காயம் நடவு செய்ய இருந்ததால் கிலோ 3000 ரூபாய் விலையில வாங்கின 15 கிலோ விதைய பாத்திகள்ல தூவிவிட்டு, விதைகளை மூடும்படி குச்சிக்கொண்டு கீறிவிட்டோம். பாத்திகளில் வெங்காய நாற்றுக்களுடன் சேர்ந்து முளைச்சுக் கிடக்கும் களைச்செடிகளை 15 மற்றும் 30வது நாளில் கைக்களைஎடுத்து பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும்.

காய்ச்சலும் பாய்ச்சலுமாக புகை நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். தோரணம் போல தொங்கும் மழைத்தூவான் கருவிகள் பாசன வேலையைச் செய்து விடும். 40 நாள் பயிரான நாற்றங்கால் பாத்திகளுக்கு தழைச்சத்து உள்ள உரங்களைக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் இளம் நாற்றுக்கள்  தளதள என்று வளர்ந்து தலை மடிந்து விடும். அதை நடவு செய்யமுடியாது. ஏற்கெனவே அடியுரமாகக் கொடுத்த ஆட்டு எருவில் போதுமான தழைச்சத்து உள்ளதால் மேற்கொண்டு கொடுக்க தேவையில்லை. நாற்றங்கால் பயிர்களின் தண்டு ஊக்கமுடன் இருந்தால்தான் அதைப் பிடுங்கி நடவு செஞ்சு அதன் மூலம் கிடைக்கும் மகசூல் சிறப்பாக இருக்கும்.

பசுமைக்குடில் விவசாயம்கடலைப்பிண்ணாக்கு 5 கிலோவை தண்ணீரில் கரைத்து பூவாளி மூலம் தெளித்து விட, நாற்றங்கால் பயிர் ஊக்கமுடன் வளரும். பசுமைக்குடிலில் வளரும் நாற்றங்கால் பயிரை எந்தப் பூச்சிநோயும் பூஞ்சாண் நோயும் தாக்காது. முளைத்த எல்லா நாற்றுகளும் பாடுவாசி இல்லாமல் நடவுக்கு வந்து சேரும். தொடர்ந்து 40 வது நாளில் நாற்றுக்களைப் பிடுங்கி வயலில் நடவு செய்யலாம்" என்று பேசிய ரமேஷ்குமார் நிறைவாக, இன்னொரு சுவையான தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

"எங்களது சொந்த உபயோகத்திற்குத்தான் பசுமைக்குடில்ல நாற்றங்கால் அமைச்சோம். ஆனா, அதை நேரில் வந்து பார்த்த அக்கம் பக்கத்து விவசாயிங்க பாடுவாசி இல்லாமல் செழிப்பா ஒரே சீராக எந்த நோய் அறிகுறிகளும் தென்படாமல் ஊக்கமாக வளர்ந்து நின்ன நாற்றுக்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. பொதுவாகச் சின்ன வெங்காய நாற்றங்கால் பாத்திகளை, நெல் நாற்றங்கால் பட்டறை போலத் திறந்த வெளியில்தான் அமைப்பாங்க. வெயில், காற்று, மழை, பனி, பூச்சி தாக்குதல்னு ஏற்படும் பாதிப்புக்களால் ஓர் ஏக்கருக்கு கணக்கு பண்ணி விடும் நாற்றங்கால் அரை ஏக்கருக்குத்தான் வந்து சேரும். இது கூடுதல் செலவா போயிடும். ஆனா, பசுமைக்குடில் நாற்றங்கால் சிந்தாமல் சிதறாமல் 100 சதவிகிதம் கைக்கு வந்து விடுவதால், செலவு குறையுது, மகசூலும் கூடுது. அதனால, வந்து பார்த்த விவசாயிங்க மட்டுமல்லாமல் அதை கேள்விப்பட்ட விவசாயிங்களும் பசுமைக்குடில்ல வளர்ந்த வெங்காய நாற்று எங்களுக்கும் வேணும் கொடுங்கனு உரிமையோடு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.

அவங்களுக்கு ஒப்பந்த முறையில நாற்றங்கால் அமைச்சுக்கொடுக்க முடிவு செஞ்சோம். தேவையான வெங்காய விதைகளை விவசாயிகள் எங்களிடம் கொடுக்க வேண்டும். அதை பசுமைக்குடில்ல உள்ள பாத்திகள்ல விதைச்சு பராமரிப்பு செஞ்சு 40 நாள்ல அவங்களுக்குப் பிடுங்கி கட்டுக்கட்டி கொடுத்துடுவோம். இதுதான் ஒப்பந்தம். எங்களுக்குப் பராமரிப்பு கட்டணமாக கிலோவுக்கு 10,000 ரூபாய் கொடுக்க வேண்டும். விதை வெங்காயம் துறையூர் போய் வாங்கி வந்தால் ஏக்கருக்கு வேன்வாடகை ஆள்கூலி சேர்த்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. நாற்றுக்களாக வாங்கும் போது விதையோடு சேர்த்து ஏக்கருக்கு 13,000 ரூபாய்தான் செலவு. இப்போது நெறைய விவசாயிங்க ஒப்பந்தம் போட்டிருக்காங்க. இப்ப... கைவசம் 100 ஏக்கருக்கு ஆர்டர் இருக்கு. சுழற்சி முறையில அதை பசுமைக்குடில்ல உற்பத்தி செய்யும் வேலை நடந்திட்டு இருக்கு. கூடவே இப்போ, பசுமைக்குடிலில் மிளகாய், தக்காளி நாற்றுக்களும் உற்பத்திசெய்யறோம். காய்கறிச் சாகுபடிக்காக அமைச்ச பசுமைக்குடில் இப்ப நாற்றங்கால் உற்பத்தி நிலையமாக மாறி, பங்கமில்லாமல் வருமானம் கொடுக்குது" என்றார் மகிழ்வுடன்.


டிரெண்டிங் @ விகடன்