`தமிழகம்தான் என் மூச்சு' - மாணவர்கள் மத்தியில் நெகிழ்ந்த கமல்ஹாசன்!

'என்னைப் போன்று, மாணவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும்' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

கமல்ஹாசன்

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு, நிர்வாகிகளைச் சேர்ப்பது, தொண்டர்களைச் சந்திப்பது என பரபரப்பாகச் சுழன்றுகொண்டிருக்கிறார், மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வரும் 8-ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் மகளிர் தின பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளார். கட்சி ஆரம்பித்த பிறகு நடக்க உள்ள முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். இதற்கிடையே, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், மாணவர்களிடையே கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு, டாஸ்மாக்கை அத்தியவாசந்த் தேவை போல அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டுள்ளது. மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் பெருகும். கொஞ்சம் கொஞ்சமாக இறப்பவர்கள், ஒரேயடியாகச் சாவார்கள் என்பதாலேயே மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூறினேன். 

இதையெல்லாம் சுத்தம்செய்ய இதுவே சரியான நேரம் என்பதால், மாணவர்கள் என்னுடன் கரம் கோக்க வேண்டும். உங்களைப் போலவே உங்கள் தலைமுறைகளும் இந்த அவலத்தில் வாழக்கூடாது. என்னைப் போன்று மாணவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும். வேலையில்லாமல் அலையும்போது ஸ்கூட்டர் எதற்கு? உங்களுக்கு நான் ஸ்கூட்டர் கொடுக்க மாட்டேன். வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றாத அரசு, ஓட்டைப்படகு போல் நீரில் மூழ்கும். வரியைக் கட்டிவிட்டு முறையாக கேள்வி கேட்போம். மாணவர்கள், தலைவர்களாக உருவாக தொண்டுசெய்யத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு பத்திரிகை வாயிலாகப் பேசிக்கொண்டிருந்தேன். ட்விட்டர் வாயிலாக பேசிக்கொண்டிருந்தேன். இப்போது ,உங்கள் வாயிலாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள்தான் என் பேச்சு. தமிழகம்தான் என் மூச்சு" என்று கூறினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!