`புலி, சிறுத்தையிடமிருந்து காப்பாத்துங்க' - கலெக்டரிடம் முறையிட்ட கிராம மக்கள்!

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள தர்மபுரம் மடம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தில், இரவு நேரங்களில் புலி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சிறுத்தை அச்சத்தில் பீதி

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள தர்மபுரம் மடம் பஞ்சாயத்துக்கு உடபட்ட ரஹ்மத் நகர் மக்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், `நாங்கள் குடியிருக்கும் பகுதியை அதிகாரிகள் யாருமே கண்டுகொள்வதில்லை. அதனால், சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளது. அத்துடன், மின்விளக்குகள் எரிவதில்லை. அதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலைமை உள்ளது. எங்கள் பகுதி புலி, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியாக இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டதற்கு, ``எங்களின் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில், கடந்த 6 மாதமாக எந்தப் பணியும் நடக்கவில்லை. குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக்கிடப்பதால், சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. அதனால், மக்களுக்கு நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. அத்துடன், மின் விளக்குகளைச் சரி செய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே எங்கள் பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் இருக்கும் நிலையில், மின் விளக்கு இல்லாததால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளோம். 

இரவு நேரங்களில் வயல் வெளியிலிருந்து வருவதற்கோ அல்லது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்புவதற்கோ அச்சப்படும் நிலைமை இருக்கிறது. காட்டு விலங்குகளால் இந்தப் பகுதி மக்களுக்கு ஆபத்து வருவதற்கு முன்பாக, மின் விளக்குகளையாவது சரிசெய்து கொடுக்க வேண்டும். கிராமத்தின் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தரக் கோரி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!