வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (05/03/2018)

கடைசி தொடர்பு:21:20 (05/03/2018)

`கந்துவட்டிக்காரரால் எங்கள் உயிருக்கு ஆபத்து' - நெல்லை கலெக்டரிடம் கதறிய குடும்பம்

நெல்லையில், வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாத நிலையில், கந்துவட்டி கும்பல் அறிவாளால் வெட்டி மிரட்டல் விடுப்பதாக அப்பாவி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். 

கந்துவட்டி கும்பலால் டார்ச்சர்

நெல்லை மாவட்டம், குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். கையில் வெட்டுக் காயத்துடன் வந்த அவர், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் மனு அளித்தார். அதில், ’’குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வரும் எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. அந்தச் செலவுகளுக்காக எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாரித்துரை என்பவரிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அவரிடம் பெற்ற கடனுக்காக இதுவரை 1,50,000 ரூபாய் வட்டியாகச் செலுத்திவிட்டேன். தற்போது எனக்கு வருவாய் இல்லாததால் சரியாக வட்டித் தொகையைச் செலுத்த இயலவில்லை. அதனால் மாரித்துரையும் அவரது மனைவி மாரியம்மாளும் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஆபாசமாகத் திட்டுவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வந்தார்கள். அதனால் நான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேட்டை காவல்நிலையத்தில் அவர்கள் மீது புகார் கொடுத்தேன்.

அப்போது என்னை அழைத்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ‘நீ வாங்கிய கடனை திருப்பிச் செலுத்து. இன்னும் ஒரு வருடத்துக்குள் பணத்தைக் கொடுப்பதாக எழுதிக் கொடு’ என வற்புறுத்தி எழுதி வாங்கிக்கொண்டார்கள். இந்த நிலையில், மாரித்துரை இன்று (மார்ச்5) எனது வீட்டுக்கு வந்து கடனைக் கேட்டு மிரட்டினார். அவரது மனைவியும் ஆபாசமாகப் பேசினார். அப்போது வீட்டிலிருந்த எனது மகள், ‘உங்க கடனை ஒரு வருடத்தில் கொடுத்து விடுவதாக எழுதிக் கொடுத்து இருக்கோம். அதனால் சிறிது சிறிதாக அடைத்து விடுகிறோம்’ என்று சொன்னார்.

அதனால் ஆத்திரமடைந்த மாரித்துரை, எனது மகளை அறிவாளால் வெட்டினார். நான் அதனைத் தடுத்ததால் எனது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. மாரித்துரையால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. காவல்துறையும் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் எனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். கந்துவட்டி கேட்டு அறிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.