வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (05/03/2018)

கடைசி தொடர்பு:21:35 (05/03/2018)

`நிர்மலாவை விசாரிக்கிறேன்' - மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி விவகாரத்தில் அதிகாரி உறுதி

குழந்தை தொழிலாளர்- அதிகாரி

கடந்த 28-ம் தேதி  விகடன் இணையதளத்தில், ''சிறுவனை பணிக்கு அமர்த்திய ஆளுங்கட்சிப் பிரமுகர்! கையை இழந்த பீகார் சிறுவன்'' என்ற தலைப்பில் வந்த செய்தியில், ''சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் செயல்பட்டுவரும் சூர்யா பிளாஸ்டிக்ஸ் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளியாக வேலைப்பார்க்கும் பீகாரைச் சேர்ந்த ஒரு சிறுவன், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய இடது கை இயந்திரத்தில் சிக்கி, உள்ளங்கை வரை உருக்குலைந்துவிட்டது. மருத்துவமனையில் அனுமதித்தால் போலீஸ் கேஸாகும் என்பதாலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைப் பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்பதாலும், அந்த குழந்தைத் தொழிலாளிக்கு சிகிச்சைகொடுக்காமல் மறைத்து வந்திருக்கிறார்'' என்று எழுதி இருந்தோம். அதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு சேலம் சைல்டு ஹெல்ப் லைன், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலகம், தொழிலாளர் நலத்துறை, மாவட்ட தொழில்துறை எனப் பல அரசுத் துறை அதிகாரிகள்  நேரடியாக அந்த நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முரளி தலைமறைவானார். குழந்தைத் தொழிலாளர் மறைத்துவைக்கப்பட்டார். பிறகு, காவல்துறை உதவியால் அந்த பீகார் சிறுவன் மீட்கப்பட்டு, சேலம் அரசு  மருத்துவமனையில் வயது உறுதி பரிசோனை செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இத்தகவலை மூடி மறைக்கும் விதமாக நிறுவனத்தின் உரிமையாளரும், ஆளுங்கட்சியினரும் முயற்சிக்கிறார்கள்.  அவர்களுக்கு உடந்தையாக, சேலம் சைல்டு ஹெல்ப் லைன் நிர்மலா செயல்பட்டுவருகிறார்கள்.

இதுபற்றி சைல்ட் ஹெல்ப் லைன் நிர்மலாவிடம் கேட்டால், ''இது பல துறை சம்பந்தப்பட்ட விஷயம். நான் எதுவும் சொல்லக் கூடாது. உங்களுக்கு யார் தகவல் சொன்னார்களோ, அவர்களிடமே கேளுங்கள். இந்தத் தகவலை வெளியில் சொல்லக் கூடாது என்று அனைத்துத் துறை அதிகாரிகளும் எனக்கு சொல்லி இருக்கிறார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியாது'' என்றார்.

இந்தச் சூழ்நிலையில், பீகார் சிறுவனை அரசு மருத்துவமனையில் சந்தித்துப் பேசியபோது, அவனுடைய பெயர் சைலேஷ்குமார் என்று மட்டும் கூறினார். மேற்கொண்டு பேசத் தெரியாமல், கை இழந்த சம்பத்தை சைகைமூலம் சொல்லிவிட்டு சைல்டு ஹெல்ப் லைன் ஊழியர் முன்பு துணிகளால் முகத்தை மூடிக்கொண்டான்.  முறையாக சிகிச்சை எதுவும் கொடுக்காததால் கை அழுகும் சூழ்நிலையில் இருப்பதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

இதுபற்றி சேலம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செல்வத்திடம் பேசியபோது, ''அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவானதோடு, சிறுவனையும் மறைத்துவைத்திருந்தார்கள். நாங்கள் முயற்சி எடுத்து, அந்தச் சிறுவனை மீட்டிருக்கிறோம். அவனுக்கு 19 வயது என்று கூறுகிறார்கள். அதனால், சேலம் அரசு மருத்துவமனையில் வயது பரிசோதனை செய்திருக்கிறோம். அந்த ரிசல்ட் வந்ததும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம். நிர்மலா ஏன் அப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை. இதுபற்றி அவரிடம் விசாரிக்கிறேன்'' என்றார்.