`மக்களின் எதிர்காலமே' - சாலையில் ரஜினியை வரவேற்ற பேனர்கள்!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலையை, நடிகர் ரஜினிகாந்த் திறந்துவைத்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த்

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, மக்கள் மன்றம்மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார், நடிகர் ரஜினிகாந்த். முதல்கட்டமாக, நிர்வாகிகளை நியமித்துவரும் அவர், விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, இன்று ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியல் அறிவிப்புக்கு பின், ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். விழாவில் பங்கேற்பதற்காக அவர் வெள்ளை சட்டை வேட்டியில் வந்தார்.

இதனால், கோயம்பேட்டிலிருந்து விழா நடைபெறும் இடம் வரை வழிநெடுகிலும் பேனர்கள், கட்-அவுட்கள் என  ரஜினிகாந்த்துக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ரஜினியின் வாகனம் நெரிசல் சிக்கிக் கொண்டது. இதையடுத்து காரிலிருந்த ரஜினி மக்களைப் பார்த்து கையசைத்தார். ரஜினிகாந்த்தை வரவேற்று வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளில் பச்சை தமிழன், வருங்கால முதல்வர், மக்களின் எதிர்காலமே போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. பின்னர் அவர், எம்.ஜி.ஆரின் புகைப்படத்தைத் திறந்துவைத்தார். பிரபு, விஜயகுமார், பி.வாசு, லதா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் விழாவில் பங்கேற்றனர். இதேபோல, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!