வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (05/03/2018)

கடைசி தொடர்பு:11:30 (06/03/2018)

`நாங்கள் தூர் வார எவனோ ஒருவன் தண்ணீரைக் கொண்டுசெல்வதா?` - ஆவேசமடைந்த கிராம மக்கள்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை – மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கண்டமனூரில், ஊருக்குத் தென்புறத்தில் பரமசிவன் கண்மாய் உள்ளது. 

கண்மாய்

இந்தக் கண்மாயைத் தூர் வார அக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில், கிராம மக்களே பணம் சேர்ந்து கண்மாயைத் தூர் வாரினர். மழைக் காலத்தில், கண்மாயில் தண்ணீர் தேங்கி நிலத்தடிநீர் பெருகியது. மக்களின் குடிநீர்ப் பிரச்னையும் தீர்ந்தது. இதற்கிடையே, கோடைக்கு முன்னரே வெயில் வாட்டிக்கொண்டிருக்கும் சூழலில், தற்போது கண்மாயின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து நூற்றுக்கணக்கான ஏக்கருக்கு தனி ஒருவர் தண்ணீர் எடுத்துச் செல்வதால், கண்மாய்மூலம் தங்களுக்கு கிடைத்த நிலத்தடிநீர் பாதிப்புக்கு உள்ளாவதாக கிராம மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து, கிராம மக்களின் பிரதிநிதி அங்குச்சாமியிடம் பேசியபோது, ``கண்டமனூர் கண்மாயைத் தூர் வாரி தண்ணீர் தேக்க, கிராம மக்கள் அனைவரும் ரத்தம் சிந்தி உழைத்தோம். ஆனால், இன்று யாரோ ஒருவர் கண்மாய் அருகில் நிலத்தை வாங்கி, அதில் கிணறு வெட்டி தண்ணீர் எடுத்து, நான்கு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலத்துக்கு தண்ணீர் கொண்டுசெல்கிறார். இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, அந்த நபர் தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், கிராம மக்கள் இணைந்து போராட்டம் நடத்துவோம். இது எங்கள் கண்மாய். நாங்கள் தூர் வார, எவனோ ஒருவன் தண்ணீரைக் கொண்டுசெல்வதா? உயிருள்ள வரை விட மாட்டோம்!`` என்றார் ஆவேசமாக. மாவட்ட நிர்வாகம் வரும் கோடையை மனதில்வைத்து, இவ்விவகாரத்தைக் கையாள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.