வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (05/03/2018)

கடைசி தொடர்பு:22:40 (05/03/2018)

`நீங்கள் செய்யுங்கள்; அல்லது நாங்கள் செய்கிறோம்.!’ – கலெக்டரிடம் கோரிக்கை வைத்த தேனி மக்கள்

தேனி மாவட்டம் கலெக்டர் அலுலகத்தில் இன்று காலை, ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னிப்பிள்ளைபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 

தேனி மாவட்ட மக்கள்

அதில், தங்கள் பகுதிகளில் இருந்த கண்மாய்கள் மற்றும் தண்ணீர் வரத்துக் கால்வாய்களைச் சீர்செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கிராம மக்களுடன் பேசியபோது, ‘’எங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நபர்களை வைத்து, 'தமிழ்நாடு நீர் ஆதாரங்கள் பாதுகாப்புகுழு' என்ற தன்னார்வலர்கள் நிறைந்த குழுவை கட்டமைத்திருக்கிறோம். கன்னிப்பிள்ளைபட்டியில் உள்ள கண்மாய், கொத்தப்பட்டியில் உள்ள புல்வெட்டிகண்மாய், ஆண்டிபட்டி கண்மாய் இவற்றுக்குத் தண்ணீர் வரும் நீர் வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். 

நீர் வரத்துக் கால்வாய்களில், மடை முதல் கண்மாய் வரை பக்கச் சுவர்கள் அமைக்க வேண்டும். நாகலாறு ஓடையிலிருந்து மடைக்குத் தண்ணீர் பிரிக்கும் சுவரின் நீளத்தை அதிகப்படுத்த வேண்டும். நீர் வரத்துக் கால்வாயின் ஆழம் மற்றும் அகலத்தை அதிகப்படுத்த வேண்டும். இவை எல்லாம் செய்யும்போது கிட்டத்தட்ட 1200 ஏக்கர் விவசாய நிலங்களின் நீர்த் தேவையும், 45 கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்திசெய்ய முடியும். எனவே, இப்பணிகளைச் செய்து, மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறோம் அல்லது நாங்களே அப்பணிகளைச் செய்ய தயாராக இருக்கிறோம். எங்களுக்குத் தேவையான பாதுகாப்பை மட்டும் கொடுங்கள். நீங்கள் செய்யுங்கள் அல்லது நாங்கள் செய்கிறோம்’’ என்றனர்.