வெளியிடப்பட்ட நேரம்: 21:38 (05/03/2018)

கடைசி தொடர்பு:21:38 (05/03/2018)

"காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியமா?" - விவசாயச் சங்கத்தினர் கருத்து இதுதான்...!

காவிரி

காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு கர்நாடகம் 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தவிடப்பட்டிருந்தது. ஆனால், நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில், தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை, அடுத்த 15 ஆண்டுகளுக்குத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைவிடவும் தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி. குறைவாகும். தமிழகத்தின் நிலத்தடி நீரைக் காரணம்காட்டி, 10 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மோடியுடன் எடப்பாடி பழனிசாமி

இந்தச் சூழலில், தமிழக அரசின் மானிய விலையிலான 'அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தை' தொடங்கிவைக்க அண்மையில் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்த கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைத்தார். என்றாலும், காவிரி மேலாண்மை வாரியம் பற்றிய எந்த அறிவிப்பையும் பிரதமர் வெளியிடவில்லை. கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பி.ஜே.பி. தமிழகத்திற்கு ஆதரவான அறிவிப்பை பி.ஜே.பி. வெளியிடாதது குறித்து, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்திருந்தன.

எடப்பாடியுடன் மு.க.ஸ்டாலின்

மேலும், காவிரிப்பிரச்னை தொடர்பாக, தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, தமிழகச் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி. தமிழக அனைத்துக் கட்சிக்குழுவை சந்திக்க பிரதமர் மறுப்பதாக ஸ்டாலினும், பிரதமர் சந்திக்க மறுப்பு தெரிவிக்கவில்லை என அமைச்சர் டி.ஜெயக்குமாரும் அடுத்தடுத்து பேட்டியளித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

ஏற்கெனவே, தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய காலக்கெடுவுக்குள் அமைப்பது குறித்து உத்தரவாதம் தர இயலாது" என்று கூறியிருந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சரின் காவிரி மேலாண்மை வாரியம் பற்றிய அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

அர்ஜூன்ராம் மேக்வால்மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன்ராம் மேக்வால், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் 6 வார காலத்திற்குள் நிறைவுபெற்று விடும்" என்றார். மத்திய அமைச்சர்களின் முரண்பட்ட கருத்துகளால், காவிரி டெல்டா விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நல்லுசாமியிடம் பேசினோம்.

"காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பே தவறானது. எனவே, அதை நடைமுறைப்படுத்த முடியாது. மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் ஒரு புரிதல் இல்லாத போக்கில் இருக்கின்றன. மத்திய அமைச்சரும் அதற்கு விதிவிலக்கல்ல.

நல்லுசாமிதமிழ்நாட்டிற்கான தண்ணீரை கர்நாடக நீர்த்தேக்கத்தில் ஏன் தேக்கி வைக்க வேண்டும்? உச்ச நீதிமன்ற விகிதாச்சாரப்படி, காவிரியில் வரக்கூடிய தண்ணீரை தினந்தோறும் பங்கிட்டுக் கொடுக்கலாம். காவிரி விஷயத்தில் மத்திய அரசு, தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மத்தியஸ்தம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. இது உள்நோக்கம் கொண்டது. 93.5 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கி வைக்கக்கூடிய அளவு மிகப்பெரிய மேட்டூர் நீர்த்தேக்கம் தமிழ்நாட்டில் இருக்கும்போது, நமக்கான தண்ணீரைத் தேக்கிவைக்க வசதி இருக்கும்போது, ஏன் கர்நாடக மாநில அணைகளில் நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரைத் தேக்கிவைக்க வேண்டும்? அதனால்தான் இந்தத் தீர்ப்பு தவறு என்று நான் கூறுகிறேன். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய சங்கத் தலைவர்களும், எந்தவொரு புரிதலும் இல்லாமலும், தீர்ப்பை முழுமையாகப் படித்துப் பார்க்காமலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கூறிவருகிறார்கள். தீர்ப்பே தவறு என்கிறபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் என்ன, அமைக்காவிட்டால் என்ன? 

காவிரியின் நீர் வளத்தை முதலில் நீதியரசர்கள் 740 டி.எம்.சி. என வரையறுத்ததே தவறு. இயற்கை என்பது ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்டுக்கொண்டேதான் இருக்கும். 'மழையே பொழி' என்றால் பெய்துவிடுமா அல்லது 'நில்' என்றால்தான் மழை நின்று விடுமா. எனவே, கட்டுக்குள் இருப்பதல்ல இயற்கை. கர்நாடக மாநில காவிரிக்கு வரக்கூடிய நீரின் அளவு எவ்வளவாக இருந்தாலும் கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவுக்கு என்று பங்கிட்டுக் கொடுத்துவிட்டுப் போவதுதானே சரியான நடைமுறையாக இருக்கும். எனவே, மத்திய அரசு காவிரி விவகாரத்தில் வெளியாகியுள்ள தீர்ப்பை திருத்தக்கோரி மசோதா கொண்டுவர வேண்டும். அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனி நபர் மசோதா மூலம் தீர்ப்பைத் திருத்தியமைக்க வலியுறுத்த வேண்டும். 

ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டால், அது கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உள்ளது. எனவே, காவிரி விவகாரத்தில் தீர்ப்பே தவறு என்கிறபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை எப்படி நடைமுறைப்படுத்தக் கோருவது?... இல்லாத ஊருக்கு எப்படித் தடம் காட்ட முடியும்?..." என்று கேள்வியெழுப்பினார் நல்லுசாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்