வெளியிடப்பட்ட நேரம்: 21:38 (05/03/2018)

கடைசி தொடர்பு:21:38 (05/03/2018)

2 நாள்கள் தாக்குதல்... மது உடலில் 50 காயங்கள்... அதிர்ச்சியளிக்கும் உடற்கூறு ஆய்வறிக்கை!

மதுவின் உடலில் 50 காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மது

கேரள மாநிலம், அட்டப்பாடியைச் சேர்ந்த மதுவின் மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுவின் மரணம்குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பசிக்கு உணவு தேடிச்சென்ற அந்த இளைஞனின் வயிற்றில், ஒரு பருக்கை சோறுகூட இல்லை என்று உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. இதனிடையே, கடந்த 24-ம் தேதி அவரின்  உடற்கூறு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. உடற்கூறு ஆய்வறிக்கை செய்த திருச்சூர் மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறை தலைவர் டாக்டர். பலராமன், அந்த அறிக்கையை பாலக்காடு ஆர்.டி.ஒ-விடம் சமர்ப்பித்துள்ளார். அதில், மதுவின் உடலில் சுமார் 50 காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, உயிரிழப்பதற்கு முந்தைய நாளே, அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலும் அதில் கூறப்பட்டுள்ளது.

அவரது உடலில் உள்ள 50 காயங்களில் 20 காயங்கள், இறப்பதற்கு முந்தைய நாள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரும்பு ராடால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரின் மரணத்துக்கு, தலையில் ஏற்பட்ட அந்தக் காயம்தான் முக்கியக் காரணம் என்று உடற்கூறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாகனத்தில் ஏறும்போது மதுவேதான் தெரியாமல் இடித்துக் கொண்டதால் காயம் ஏற்பட்டது என்று திசை திருப்புவதற்கான முயற்சியும் நடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல, மது கஞ்சாவுக்கு அடிமையானவர், காதல் தோல்வியால்தான் காட்டுக்குச் சென்றார் என்ற ரீதியிலும் வழக்கை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.