வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (05/03/2018)

கடைசி தொடர்பு:23:40 (05/03/2018)

'எந்த விசாரணை குறித்தும் பயம் கிடையாது' - சொல்கிறார் சுப.உதயகுமாரன்!

வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அணு உலை எதிர்ப்பாளரான சுப.உதயகுமாரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் 6-ம் தேதி அமலாக்கத்துறையிடம் விளக்கமளிக்க உள்ளார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவர் குற்றம் சாட்டினார். 

சுப உதயகுமாரன்

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவராக இருப்பவர், சுப.உதயகுமாரன். அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வரும் அவர், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்களுடன் இணைந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர்மீது தேசத்துக்கு எதிராகப் போராடியது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. 

கூடங்குளம் அணு உலைப் போராட்டம் நடந்தபோதே, சுப.உதயகுமாரன் அந்நிய நாட்டிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு போராடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது வங்கிக் கணக்குகள், பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை மத்திய உளவுத் துறையினரும் வருமான வரித்துறையினரும் ஆய்வு செய்தனர். ஆனால், அவருக்கு வெளிநாட்டிலிருந்து எந்தப் பணமும் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அத்தகைய குற்றச்சாட்டுக்களை கிடப்பில் போட்டனர்.

இந்த நிலையில், சுப.உதயகுமாரன் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக 6-ம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறையின் இணை இயக்குநர் அலுவலகம் சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதனை ஏற்று அவர் அந்த அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இது பற்றி பேசிய சுப.உதயகுமாரன், ‘’எனக்கு மடியில் கனமில்லை. அதனால் எந்த விசாரணை குறித்தும் பயம் கிடையாது. எனக்கு சம்மன் கிடைத்து இருப்பதால், எனது வங்கிக் கணக்கு, ஆடிட் ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் 6-ம் தேதி ஆஜராக தயாராக இருக்கிறேன்.

ஆனால், அந்தச் சம்மனில், எந்த வழக்கு என்பது கூட குறிப்பிடப்படாமால் வெறும், ’வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை’ என்பது மட்டும் குறிப்பிட்டு அழைப்பு ஆணை அனுப்பியிருக்கிறார்கள். கன்னியாகுமரி அருகே சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், மீனவர்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நானும் அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறேன்.

அதனால் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி என் மீது வீண்பழியை ஏற்படுத்தும் வகையிலும், எனக்கு மன உளைச்சலையும் நெருக்கடியையும் கொடுக்கும் வகையிலும் இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், இதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை. என்னிடம் எந்தத் தவறும் இல்லாததால் எந்த விசாரணைக்கும் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்’’ என்றார்.