சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் கூட்டணி - நல்லக்கண்ணு குற்றச்சாட்டு!

தமிழ்நாடு பாலைவனமாக மாறிவருகிறது. தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள்தான் மணல் தட்டு்பாட்டிற்கு காரணம் என்று, இன்று ராஜபாளையத்துக்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் வேதனையை பகிர்ந்து கொண்டார்.

நல்லக்கண்ணு

நல்லக்கண்ணு  மேலும் பேசும்போது, ''பி.ஜே.பி, திரிபுராவில் சூழ்ச்சிகளை செய்து வெற்றி பெற்றுள்ளது. 25 ஆண்டுகளாக மாணிக் சர்கார் நல்லாட்சி நடத்தினர். பழங்குடி மக்களை திட்டமிட்டு பயன்படுத்தி சட்டவிரோதமாக பி.ஜே.பி வெற்றி பெற்றுள்ளது. இது நாட்டிற்கு ஆபத்து. தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் மணல் கொள்ளைக்கு உடந்தையாக  இருந்து 33 ஆறுகளை பாழடித்து விட்டார்கள். சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி 3 அடிக்கு பதிலாக 100 அடிக்கு மணல் அள்ளப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில்  இயந்திரம் பயன்படுத்த தடை உள்ளது.  ஆனால் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுகிறது. ஆற்றுப்படுகைகளில் உள்ள மரங்கள் பட்டுப் போய்விட்டன. தமிழ்நாடு பாலைவனமாக மாறி வருகிறது. தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள்தான் மணல் தட்டு்பாட்டிற்கு காரணம். சில மாவட்டங்களில்  ஆட்சியர்களே  மணல் கொள்ளைக்கு துணையாக இருக்கிறார்கள். சேகர்ரெட்டி போன்ற மணல் கொள்ளையர்களுடன் தமிழக அமைச்சர்கள்  கூட்டணியாக இருக்கின்றனர். நெடுஞ்சாலைத் துறையில் முறைகேடு நடந்திருந்தால் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும். ஆட்சியில் உள்ளவர்களால் அதிகாரிகளை கட்டுபடுத்த முடியவில்லை. என்கவுன்டர் என்ற பெயரால் கொலைகள் நடக்கிறது.  காவிரி மேலாண்மை வாரியம் அமையும்  என்ற  நம்பிக்கை எனக்கு இல்லை'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!