தொடரும் கந்துவட்டி கொடுமை; தீக்குளிக்க முயன்றவரை தடுத்த போலீஸார்!...

கந்துவட்டி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தறி ஓட்டும் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம், வீரவண்டி அஞ்சல் அரியனூரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். தறி ஓட்டும் தொழிலாளியான இவர் லோகநாதன் என்பவரிடம் கடந்த இரண்டு வருடங்களாக கூலிக்கு தறி ஓட்டி வந்திருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக கன்னியப்பன் தனது முதலாளியான லோகநாதனிடம் 90 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியிருக்கிறார். அந்தக் கடனை அடைப்பதற்காக, அவரிடமே வேலை பார்த்து, கிடைத்த கூலிப் பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து ஒருவழியாக முழுக் கடனையும் அடைத்திருக்கிறார்.  

கந்துவட்டி

கடன் முடிந்துவிட்டது என பெருமூச்சி விட்டவருக்கு அப்போது தான் அந்த பேரிடி தலையில் இறங்கியது. ‘இதுவரை நீ கட்டியது வாங்கிய கடனுக்கான வட்டி தான். அசலை யார் கட்டுவா?’ என  முதலாளி லோகநாதன் மனிதாபிமானமே இல்லாமல் கன்னியப்பனிடம் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அடியாட்களை வைத்து அடித்து மிரட்டி தொல்லை கொடுத்திருக்கிறார். இதில் பயந்துபோன கன்னியப்பன், கடந்த 3 மாதங்களுக்கு முன் சேலத்திலிருந்து தப்பிவந்து ஈரோட்டிலிலுள்ள ஒரு இடத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இதற்கிடையே கன்னியப்பன் குடும்பத்தினருக்கு பலவிதங்களில் லோகநாதன் குடைச்சல் கொடுத்து வந்திருக்கிறார். இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்ட கன்னியப்பன், லோகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார். புகார் மனுவில், ‘நான் கடனை திருப்பிக் கொடுத்தும் எனக்கு பாண்டு பத்திரத்தை கொடுக்காமல் என்னிடம் மேலும் பணத்தை பறிக்க அடியாட்கள் மூலம் மிரட்டி லோகநாதன் என்பவர் பணம் கேட்கிறார். அவருக்கு பயந்து என்னுடைய தாய்,தந்தை, மனைவி,குழந்தைகளை விட்டு தலைமறைவாக இருந்து வருகிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன் கையில் கொண்டுவந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தன்னுடைய உடம்பில் ஊற்றி தீ வைக்க கன்னியப்பன் முயற்சித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் கன்னியப்பனை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பிறகு இருசக்கர வாகனத்தின் மூலமாக கன்னியப்பனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார், விசாரணைக்குப் பின்னர் வழக்கு பதிவு செய்தனர். இதில் பயந்துபோன கன்னியப்பன் போலீஸாரிடம் இருந்து தப்பித்துச் சென்றார். 

கன்னியப்பன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் லோகநாதனை கைது செய்து விசாரணை மேற்கொள்ள போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற கன்னியப்பனையும் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தும் தொடர்ந்து அதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. கந்துவட்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இனிமேலாவது தமிழக அரசு எடுக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!