வெளியிடப்பட்ட நேரம்: 02:40 (06/03/2018)

கடைசி தொடர்பு:02:40 (06/03/2018)

தமிழகத்தில் கூலிக்கு கொலை செய்யும் ரவுடிகள் இருக்கிறார்கள்..! ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அவரது மாவட்ட அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், 'உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தும் மத்திய அரசு அதை அமுல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக அரசு அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் கொடுக்காதது தவறானது. தற்போதையை தகவல் படி மத்திய பா.ஜ.க அரசு 4 மாநில பிரதிநிதிகளை அழைத்து உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி பேசுவதாக அறிவித்து இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. தீர்ப்பளித்த பிறகு அதை நிறைவேற்றுவது தான் மத்திய அரசின் கடமை. மேற்கொண்டு செய்ய வேண்டியதை தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவுகள் எடுக்க வேண்டும். 

மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு மற்றும் தவறான பொருளாதார கொள்கையால் தொழில்துறை, வேளாண் துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க., ஆட்சி அமைத்தால் வருடம் 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறினார்கள். ஆனால் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் 1 1/2 லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு செய்து தரவில்லை. 

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளைபுத்தூர் கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் சிறுவனை படுகொலை செய்து விட்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்து தாயை படுகாயம் செய்திருக்கிறார்கள். அதே மாவட்டத்தில் உள்ள வசந்த கிருஷ்ணாபுரம் பகுதியில் 3 தலித் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டு ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மீண்டும் அதே மாவட்டத்தில் செங்கனாபுரம் பகுதியில் பள்ளிக்கு சென்று வந்த தலித் சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து தலித் மக்கள் தாக்குதலுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட காவல்துறை செயல்படாமல் இருக்கிறது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வந்த பிறகே விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சம்பவ இடத்திற்கு செல்லுகிறார் என்றால் காவல்துறையின் கண்காணிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சேலம் மாவட்ட கல்வராயன் மலை வாழ் மக்கள் ஏற்கனவே 20 பேர் ஆந்திர அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தற்போது 5 பேர் மர்ம மரணம் அடைந்துள்ளார்கள். கல்வராயன் மலையில் வேலைவாய்ப்பு இல்லாததால் வெளி மாநிலத்திற்கு செல்லுகிறார்கள். அரசு கல்வராயன் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் செய்து கொடுக்க வேண்டும். 

தமிழக அரசு சத்துணவு ஆயா முதல் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனம் வரை ஊழல் புரையோடி கிடக்கிறது. அதனால் வரும் சட்டமன்றத்தில் ஊழல் தடுப்பு சட்டம், சாதி ஆணவ படுகொலைக்கான சட்டம் ஆகிய புதிய சட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தி விட்டதாக அரசு சொன்னாலும் இன்றளவும் கூலிக்கு கொலை செய்யும் ஆட்கள் இருக்கிறர்கள்.

மத்திய அரசு வருமான வரித்துறை, சி.பி.ஐ., மத்திய அமலாக்க பிரிவு துறைகளை பயன்படுத்தி அ.தி.மு.க.,வினரை மிரட்டி பா.ஜ.க.,வின் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. திரிபுராவில் கம்யூனிஸ்ட் தோல்விக்கு காரணம் பா.ஜ.க., மலைவாழ் மக்கள், மலைவாழ் மக்கள் அல்லாதோரின் ஒற்றுமையை பிரித்தும், அரசியல், பணப் பலத்தை பயன்படுத்தியும் பா.ஜ.க.,வெற்றி பெற்றிருக்கிறது. வன்முறையாக பேசி வரும் பா.ஜ.க., தலைவர் ஹெச்.ராசா பற்றி பேச விரும்பவில்லை. தமிழகத்தில் பி.ஜே.பி., ஆட்சிக்கு வரும் என அவர் கற்பனை காண்பதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அவர் வன்முறையாக பேசுவை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.