மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு திருநங்கைகள் சீர்வரிசையுடன் சிறப்பு வழிபாடு!

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகள் சுமங்கலி சீர்வரிசையுடன் வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி வழிப்பட்டனர்

திருநங்கைகள் வழிபாடு

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா மார்ச் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்தக் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் கேரளாவைச் சேர்ந்த பெண் பக்தர்களும் இருமுடி கட்டி விரதம் இருந்து வந்து அம்மனை வழிபடுகின்றனர். இந்த விழாவின் இரண்டாம் நாளான இன்று முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக திருநங்கைகள் அம்மனுக்கு பட்டு, குங்குமம், வளையல், மலர்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சுமங்கலி சீர்வரிசையாகக் கொண்டு வந்து அம்மனுக்குப் படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். 

பகவதி அம்மன் கோயில் திருவிழாவின் மூன்றாம் நாளான 6-ம் தேதி காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியாக வருகிறார். மாலை 4 மணிக்கு கீழ்கரை பிடாகையில் இருந்து யானை மீது களபம் பவனி, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்தக் கோயில் திருவிழாவின் போது நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!