'' சூதாட்டங்கள்; குட்கா; ஒரு நம்பர் லாட்டரி விற்பனை..!'' முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு

''ஒரு நம்பர் லாட்டரி, இணைய தளம் வாயிலாக நடைபெறும் சூதாட்டங்கள், குட்கா விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை போன்ற குற்றங்கள் நடந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலுள்ள காவலர்களை பொறுப்பாக்கி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி காவல்த்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி தலைமையில் கோட்டையில் 5.3.2018 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடந்து. அதில் முதல்வர் உரை ஆற்றினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் துறைஅதிகாரிகளாகிய நீங்கள், உங்களுக்கு கிடைத்த இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் நலனுக்காக திட்டங்களைச் செயல்படுத்தி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பாலமாகவும், மக்கள் சேவகர்களாகவும் செயல்படவேண்டும்.

* மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும்தான் பொறுப்பு.  நீங்கள், இரு துருவங்கள் போல் இல்லாமல், இருவரும் இரு கண்களைப் போல் ஒருங்கிணைந்து செயல்பட்டால், சட்டம் ஒழுங்கை மேலும் சிறப்பாகப் பேணிக்காக்க இயலும்.

*  முளையிலேயே கிள்ளி எறிவது, என்ற பழமொழிக்கு ஏற்ப, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன் அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பயங்கரவாதமும், மதவாதமும், இடதுசாரி தீவிரவாதமும் சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இச்சவால்களை திறம்பட எதிர்கொள்ள, நமது புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்தி, பயங்கரவாத அமைப்புகள் உருவாகாமல் தடுத்து, ஆரம்ப நிலையிலேயே களை எடுக்க வேண்டும். 

* தேசிய பாதுகாப்புக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும்.

* சாதி மோதல்கள் ஏற்படக்கூடிய பதட்டமான பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும், தங்களுடைய கண்காணிப்பு வளையத்திற்குள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். 

* வழிப்பறிக் கொள்ளை, நகைப் பறிப்பு ஆகிய குற்றச் செயல்களை வளரவிடாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். 

* முன்விரோதம் மற்றும் தொழில் தகராறு காரணமாக மர்ம நபர்களால் நடத்தப்படும் படுகொலை சம்பவங்களை ஒடுக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* இளைஞர்களிடையே தற்போது புதிதாக தலையெடுத்துள்ள கத்தி போன்ற ஆயுதங்களைப் பொது இடங்களில் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் கலாச்சாரத்தினை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* சாலை விபத்துகள் தனிமனித வாழ்வில் பெரும் துயரத்தையும், பேரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. அவற்றைத் தடுக்க, அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை இனம் கண்டறிந்து, ஒரு விபத்து கூட அவ்விடத்தில் ஏற்படாமல் தடுக்க, முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* கந்துவட்டி சம்பந்தமாக பெறப்படும் புகார்கள் மீது, தற்பொழுது அமலில் உள்ள ''தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம், 2003'' ன்படி உரிய நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

* ஒரு நம்பர் லாட்டரி, இணைய தளம் வாயிலாக நடைபெறும் சூதாட்டங்கள், குட்கா விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை போன்றவை பொதுமக்களை, குறிப்பாக எதிர்கால சந்ததியினரைப் பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்ந்து இவற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தொடர வேண்டும். இம்மாதிரியான குற்றங்கள் ஏதும் உங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடப்பதாகத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலுள்ள காவலர்களை பொறுப்பாக்கி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பொருளாதார குற்றங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், சாதிய ஆணவக் கொலைகள் போன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக வரும் புகார்கள் மீது, காலம் தாழ்த்தாமல் வழக்குகள் பதிவு செய்து, உரிய தொடர் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

* தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்  மீதான வன் கொடுமை புகார்களைப் பதிவு செய்து, அச்சட்டத்தின்படி பாரபட்சமின்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டினை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, இவற்றினை முற்றிலுமாக களைய தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட சிறைச் சாலையினுள் மீண்டும் குற்றம் செய்ய தூண்டும் நடவடிக்கைகள் இருந்தால், சமூகத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். எனவே, சிறைச்சாலைகளில் கண்காணிப்பை மேலும் செம்மைப்படுத்தி, இம்மாதிரி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சிறைத்துறை அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!