வெளியிடப்பட்ட நேரம்: 05:20 (06/03/2018)

கடைசி தொடர்பு:05:20 (06/03/2018)

திருட்டு வழக்கில் நிரபராதியை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஓர் ஆண்டு சிறை..!

திருட்டு வழக்கில் தவறுதலாக நிரபராதியை தாக்கியது தொடர்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கண்ணனுக்கு அம்மாவட்ட நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கண்ணன்(53). இவர் நயினார்கோயில் அருகே மேமங்கலம் கிராமத்தில் ஜெயராணி என்பவரது வீட்டில் நகை திருடு போனது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரை காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்து தாக்கியதில் அவர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து கணேசன் பரமக்குடி கோட்டாட்சியர், மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியனவற்றில் புகார் செய்தார். மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி பரமக்குடி டி.எஸ்.பி.ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜெயராணியின் காணாமல் போன நகையினை யாரோ அவரது வீட்டில் போட்டு விட்டனர். 

 பரமக்குடி டி.எஸ்.பி.ஆறுமுகசாமி மேற்கொண்ட விசாரணையில் கணேசன் தவறு செய்யவில்லை என்றும், அவரைத் இன்ஸ்பெக்டர் கண்ணன் தாக்கி துன்புறுத்தியதும் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆய்வாளர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனவும் பரிந்துரைத்தார். இதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக நயினார்கோயில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இவ்வழக்கை ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்ற கணேசன் கேட்டுக் கொண்டதையடுத்து வழக்கு ராமநாதபுரம் 2 வது குற்றவியல் நீதிமன்றத்துக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

வழக்கினை விசாரித்த 2 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு)ஜி.இசக்கியப்பன் கணேசனை திருட்டு வழக்கில் தவறுதலாக தாக்கியதால் அவருக்கு ஒரு ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் ஆய்வாளர் கண்ணன் அபராதத்தொகை ரூ.10ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார். பின்னர் நீதிபதியிடம் தனக்கு ஜாமீன் வேண்டும் எனவும் கேட்டு விண்ணப்பித்ததைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தற்போது தருமபுரி மாவட்டம் களத்தாவூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.