அ.தி.மு.க கொடிகளையும் அகற்றவேண்டும்.! ஆட்சியரிடம் தி.மு.கவினர் மனு

தனிநபருக்கு சொந்தமான இடங்களிலுள்ள தி.மு.க கொடிக்கம்பங்களை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133-ன்படி அகற்றவேண்டும் என தூத்துக்குடி சார்-ஆட்சியர் பிறப்பித்துள்ள ஆணையைப் போல, மாவட்டத்தில் பொதுஇடங்கள், நெடுஞ்சாலைத்துறை, அரசு புறம்போக்கு இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து அ.தி.மு.க கொடிக் கம்பங்களையும் இதே குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி உத்தரவு பிறப்பித்து உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் சார்பில் தி.மு.கவினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

dmk pettition to collector

இது குறித்து ஜோயல் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில், “இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தனியாருக்கு சொந்தமான பட்டா இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடியை ஏற்றுவதற்கு, இடத்தின் உரிமையாளரிடம் மட்டுமே அனுமதி பெற்றால் போதும் என இந்தியத் தேர்தல் ஆணைய சட்டப்பிரிவுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டவிதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு, எந்தவித முன்அறிவிப்பும் இன்றி திருடர்களைப்போல அத்துமீறி நுழைந்து விலை உயர்ந்த துருப்பிடிக்காத கொடிக்கம்பி கயிறுகளையும், கொடியையும் கிழித்து எறிந்து, கொடிக்கம்பி கயிறுகளையும் திருடிச்சென்றுள்ளனர். இத்தவறுகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள நிலஉரிமையாளர்கள் மீது காவல்துறை மூலமாக வழக்கும் பதிவு செய்துள்ளனர். இச்செயலானது, ஒருதலைபட்சமாக ஆட்சியர் நடந்துகொண்டுள்ளார் என்பதை மிக தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. 

joelஆட்சியர் என்பவர் குறிப்பாக மாவட்டத்திலுள்ள அனைத்துமக்களையும், மக்களின் நலனையும், வாழ்வாதாரங்களையும், இயற்கைவளங்களையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்புமிக்க பதவியை வகித்து வருகிறார். ஆனால், மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. பெரிய தொழிற்சாலைகள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து நிலத்தடிநீரை தினம்தோறும் கொள்ளை அடித்து செல்கின்றன.

மணல்கொள்ளை படுஜோராக நடந்து வருகிறது.இதுபோன்ற பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் அதிகமாக இருந்துவரும் நிலையில் இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட ஆட்சியர் மவுனியாக இருந்துகொண்டு ஆளும்கட்சியினரின் கைப்பாவையாக மாறி திமுக கொடிக்கம்பங்களை அகற்ற நினைப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ”தனிநபருக்கு பாத்தியப்பட்ட இடங்களிலுள்ள தி.மு.க. கொடிக் கம்பங்களை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133ன்படி அகற்றவேண்டும்” என தூத்துக்குடி சார்-ஆட்சியர் பிறப்பித்துள்ள ஆணையைப் போல, மாவட்டத்தில் பொதுஇடங்கள், நெடுஞ்சாலைத்துறை, அரசு புறம்போக்கு இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து அ.தி.மு.க., கொடிக்கம்பங்களையும் இதே குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி உத்தரவு பிறப்பித்து உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் துரிதமாக உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என அந்த மனுவில் கூறியுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!