ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு: 3 வது அணி அமைக்க பேச்சு

stalin

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கிறது. அதற்கான வியூகம் அமைத்து இந்த ஆண்டு தொடக்கத்திலியே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனது சுற்றுப் பயணத்தை தொடங்கி விட்டார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி, தேசிய அளவில் பா.ஜ.க-வையும் காங்கிரஸ் கட்சியையும் சமதூரத்தில் வைத்து தேர்தல் அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறது. இது, மார்க்சிஸ்ட் கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் படு தோல்வியைச் சந்தித்துள்ளன. கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளாததே இந்த தோல்விக்கு காரணம் என்று திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய அளவில்  3 வது அணி அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி  தலைவர் சந்திரசேகர ராவ், சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார். இதற்கு மம்தா ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி 12 நிமிடம் தொலைபேசியில் நேற்று பேசினார். இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் எம்.பி.டெரக் ஓ பிரெய்ன் கூறுகையில், ''நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படுகிறார் மம்தா. அவரோடு பேசி வருகிறார். அதுபோலவே ஸ்டாலினுடன் பேசினார். பா.ஜ.கவுக்கு எதிரான புதிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்று சொல்ல முடியாது?'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!