ஹோவர் கிராஃப்ட் கப்பலில் சென்று ராமேஸ்வரம் கடல்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் புரோகித்!

 தமிழக மீனவர்களுக்குப் பிரச்னை  ஏற்படும் எல்லைப் பகுதிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஹோவர் கிராஃப்ட் கப்பலில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஹோவர் கிராஃப்ட் கப்பலில் சென்று ஆய்வு நடத்திய கவர்னர்

தமிழகக் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தினருடன் ஒருநாள் பயணமாக நேற்று (6.3.2018) ராமேஸ்வரம் வந்தார். அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலையில் நடைபெறும் ஸ்படிகலிங்க தரிசனம் மற்றும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்திற்குச் சென்ற கவர்னர் புரோகித் அங்கு கலாமின் சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று திரும்பினார். மாலையில் மண்டபத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல் படை நிலையத்திற்குச் சென்ற கவர்னரை, கிழக்கு பிராந்திய கடலோரக் காவல்படை தளபதி ராஜன் மல்ஹோத்ரா, மண்டபம் கமாண்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

 பின்னர் அங்கிருந்து கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் பயணித்த கவர்னர் இந்தியக் கடல் எல்லை பகுதியில் தமிழக மீனவர்களுக்குப் பிரச்னை ஏற்படும் பகுதிகளைப் பார்வையிட்டு பிரச்னைக்கான காரணங்கள் குறித்து கடலோரக் காவல் படை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகக் கடலில் பயணம் மேற்கொண்ட கவர்னர் புரோகித் பின்னர் கரை திரும்பி, அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். இரவு 8 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து சேது எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்குச் சென்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!