"பாடத்தில் உள்ளதை மட்டுமே சொல்லித் தருவது வேலை அல்ல!" - ஆசிரியர்களுக்கு  அறிவுரை | Training camp for school teachers held in Pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (06/03/2018)

கடைசி தொடர்பு:10:30 (06/03/2018)

"பாடத்தில் உள்ளதை மட்டுமே சொல்லித் தருவது வேலை அல்ல!" - ஆசிரியர்களுக்கு  அறிவுரை

"ஆசிரியர்கள் தனித்து செயல்படக் கூடாது. சமுதாயத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.அப்போதுதான் தரம் வாய்ந்த வாழ்க்கைக் கல்வியையும் மாணவர்களுக்கு நாம் தர முடியும்"என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை நகரில் நேற்று (5.3.2018) அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சிப் பட்டறை  நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டார வளமைய பயிற்றுநர்கள் என மொத்தம் 280 பேர் கலந்துகொண்டனர். பயிற்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன, முதுநிலை விரிவுரையாளர் மாரியப்பன் பேசினார்.

மாரியப்பன்'அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளின்  முன்னேற்றத்தில் மாணவர் சேர்க்கை பள்ளியின் வளங்களைப் பராமரித்தல் ,பள்ளியின் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக்குதல், அடிப்படை கட்டமைப்பை உருவாக்குதல், குழந்தைகளின் கற்றலை மேம்பாடு அடையச் செய்தல் போன்றவை பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகள்.

இந்தக் குழுக்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருன்றன. இக்குழுக்கள் இன்னும்  சிறப்பாகச் செயல்படுவதற்கு பயிற்சியளிக்கத்தான் இன்று கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியின் நோக்கமே கிராமத்தில் உள்ளவர்களைப்  பள்ளிச் செயல்பாடுகளில் கலந்துகொள்ளச் செய்வது ,மூன்றாம் பாலினத்தவர்களை மனிதநேயத்தோடு அணுகுவது,பேரிடர் மேலாண்மை பற்றி முழுமையான கருத்துகளை மாணவர்கள் அறிந்திருக்கச் செய்வது, குறிப்பாக மழைக்காலம்,கோடைக்காலம்,மின்சாரம் இவற்றிலிருந்து பாதுகாக்க வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். பாடத்தை மட்டுமே சொல்லித் தரக் கூடாது. அதையும் தாண்டி மதிப்புக் கல்வி, வாழ்க்கைக் கல்வி பற்றி முழுமையாக மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். மேலும், தரமான கல்வி வழங்க வேண்டும் சமூகத்தோடு ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்"என்றார். இந்தப் பயிற்சியில் பள்ளி மேலாண்மைக் குழு செயல்படும் விதங்கள் குறித்து தலைமை ஆசிரியர் கிறிஸ்டி தலைமையிலான குழு நடித்துக் காட்டியது.