‘தி.மு.கவுடன் தேர்தல் கூட்டணி’ - உறுதிப்படுத்திய வைகோ!... | Vaiko confirmed DMK-MDMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (06/03/2018)

கடைசி தொடர்பு:08:30 (06/03/2018)

‘தி.மு.கவுடன் தேர்தல் கூட்டணி’ - உறுதிப்படுத்திய வைகோ!...

தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து வரப்போகின்ற தேர்தலைச் சந்திக்கவிருப்பதாக வைகோ, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்திருக்கிறார்.

வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று (5.3.2018) நடைபெற்றது. ஈரோட்டை அடுத்த ஆர்.என்.புதூர் பிளாட்டினம் மஹாலில் மாலை 6 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் இரவு 8.30 மணி வரை நடந்தது. உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  அதில் பேசிய பலரும், ‘பொதுச்செயலாளர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுகிறோம்’ என ஒரே குரலில் சொல்லியிருக்கின்றனர்.

அதனைத்தொடர்ந்து, 9 மணியளவில் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற அரங்கில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளைத் தவிர வேறு யாரையுமே அனுமதிக்கவில்லை. அரங்கைச் சுற்றியுள்ள கதவுகளை இழுத்து மூடி அருகே பாதுகாப்பிற்காக நிர்வாகிகளை நிறுத்தியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ, “நான் பொதுக்குழுவையே ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுவேன்.அப்படியிருக்க, கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. பலரும் தங்களுடைய கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார்கள். திராவிட இயக்கத்தினை அபாயமான சக்தி நெருக்கிவருகிறது. தற்போது 3 மாநிலங்களைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க, அடுத்ததாகத் தமிழகத்தையும் கைப்பற்றுவோம் எனக் கூறுகிறார்கள். அவர்களுக்கு இந்தத் திராவிட இயக்கம் உறுத்திக்கொண்டிருக்கிறது. எல்லா இடத்தையும் கைப்பற்றிவரும் பா.ஜ.க, தமிழகத்திலும் புதுவையிலும் எப்படி ஊடுருவுவது என யோசிக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நான் இருக்கிறேன்” என்று கொஞ்சம் கேப் விட்டவர், “அடுத்து வரும் தேர்தல்களில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறேன்” என்றார். இன்று (6.3.2018) காலை 10 மணியளவில் இதே அரங்கில் நடைபெறவிருக்கும் ம.தி.மு.க-வின் 26-வது பொதுக்குழுவில் இந்த முடிவினை வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


[X] Close

[X] Close