வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (06/03/2018)

கடைசி தொடர்பு:10:38 (06/03/2018)

`குடிநீர் குழாய்களைப் பதம்பார்த்த ட்ரில்லிங் இயந்திரங்கள்!’ - ம.தி.மு.க பொதுக்குழுக் கூட்ட சர்ச்சை

ம.தி.மு.க கொடி கம்பங்கள் நடுவதற்காக அக்கட்சியின் தொண்டர்கள் சாலை ஓரத்தில் தோண்டிய குழியால், பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர்  குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணானது. 

வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் (மார்ச் 5) மற்றும் 26-வது மாநிலப் பொதுக்குழு கூட்டம் (மார்ச் 6) ஈரோடு பவானி சாலையில் உள்ள பிளாட்டினம் மஹாலில்  நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பான முறையில் கடந்த ஒரு வாரமாகச்  செய்யப்பட்டு வந்தன. ஈரோடு நகர் முழுவதும் ம.தி.மு.க கொடி, பேனர் என திரும்பும் இடமெல்லாம் திருவிழாக்கோலமாக காட்சியளித்து வருகின்றன.

கூட்டம் நடைபெறும் பிளாட்டினம் மஹால் ஆனது, ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பவானி சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த 15 கிலோ மீட்டர் முழுக்க சாலையின் இருபுறங்களிலும் கட்சிக்கொடி தாங்கிய கம்பங்கள், பேனர்கள் என வரிசை கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆளுயரத்திற்கு மேல் உயர்ந்து நிற்கும் கட்சிக் கொடி தாங்கிய கம்பங்களானது, ட்ரில்லிங் இயந்திரம் மூலமாக சாலையைத் துளையிட்டு நடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், ஆர்.என்.புதூரை அடுத்த பாலக்காட்டூர் பகுதியில் கொடிக் கம்பங்களை நடுவதற்காக சாலையோரத்தில் ட்ரில்லிங் இயந்திரங்களைக் கொண்டு துளையிட்டுள்ளனர். அப்போது சாலையின் அடியில் சென்ற குடிநீர்க் குழாயில் துளை ஏற்பட்டு, தண்ணீர் பீறிட்டு ஆறாக ஓடியது. இதேபோல பல இடங்களிலும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. அந்தத் தண்ணீரானது சூரியம்பாளையத்தில் உள்ள நீரேற்றும் நிலையத்திலிருந்து, ஈரோடு நகரின் பல பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.

கட்சி நிகழ்ச்சிக்காக ஆடம்பரமான முறையில் கம்பங்களை நடுவதற்காக குடிநீர் குழாய்களை உடைத்து, தண்ணீரை வீணாக்குவது எந்தவிதத்தில் நியாயம் என ம.தி.மு.கவினரிடம் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பேனர்கள் வாகன ஓட்டிகளுக்குத் தேவையில்லாத சிரமத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.